பயிற்சித் துறையின் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சரத்குமார் ஆய்வு

செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய பயிற்சிகள் வழங்க அமைச்சர் சரத்குமார் அறிவுறுத்தினார்.
அமைச்சர் சரத்குமார்
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (12.06.2026) சென்னை அண்ணா நிருவாக பணியாளர் கல்லூரியில், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் த. சரத்குமார் தலைமையில் பயிற்சித்துறையின் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

ஆய்வுக்கூட்டம்

இந்த ஆய்வுக்கூட்டத்தில் பயிற்சித்துறையின் மூலம் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் அடிப்படைப்பயிற்சி, பணியிடைப்பயிற்சி, மற்றும் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு அளிக்கப்படும் பயிற்சி குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அமைச்சர் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய பயிற்சிகள் வழங்க அறிவுறுத்தினார். மேலும், போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களின் மூலம் தேர்வர்களுக்கு பயிற்சியினையும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுரை வழங்கினார்.

அமைச்சர் அண்ணா நிருவாக பணியாளர் கல்லூரியிலுள்ள பயிற்சி வகுப்பறைகள், பயிற்சியாளர்கள் தங்கும் விடுதிகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு பயிற்சியில் பங்கேற்ற அரசு அலுவலர்களுடன் பயிற்சி குறித்து கலந்துரையாடினார். அமைச்சர் அரசு அலுவலர்கள் தங்களுக்கு வழங்கப்படும் பயிற்சியினை முறையாக மேற்கொண்டு திறம்பட பணியாற்றி மக்களுக்கு சேவை புரிய வேண்டும் என தெரிவித்தார். மேலும் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்திலுள்ள பயிற்சி வகுப்பறைகள், தேர்வர்கள் தங்கும் விடுதிகளை ஆய்வு மேற்கொண்டு தேர்வர்களுடன் பயிற்சி குறித்து கலந்துரையாடினார்.

இந்த ஆய்வின் போது மனிதவள மேம்பாட்டுத்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் சி. சமயமூர்த்தி, அண்ணா நிருவாக பணியாளர் கல்லூரி, இயக்குநர்/பயிற்சித்துறை தலைவர் ச. கோபால சுந்தரராஜ், கூடுதல் இயக்குநர்கள், மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com