ரூ.11.55 கோடியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு

ரூ.3.71 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்.
ரூ.11.55 கோடியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி, இன்று (13.03.2026) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, திரு.வி.க.நகர் மற்றும் துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திரு.வி.க.நகர் மற்றும் ராயபுரம் மண்டலங்களில் ரூ.11.55 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு மையக் கட்டடம், தானியங்கி கழிவுநீர் நிலையம், புனரமைக்கப்பட்ட கழிவுநீர் உந்து நிலையங்கள் ஆகிய முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, ரூ.3.71 கோடி மதிப்பீட்டில் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் வடிகால் வசதி, சுகாதார மையக் கட்டடம், பெண்கள் நவீன உடற்பயிற்சிக் கூடம், குழந்தைகள் மையக் கட்டடம், வேம்புலியம்மன் திருக்கோவில் திருப்பணி ஆகிய பணிகளை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74, பாஷ்யம் 2ஆவது தெருவில் மாநகராட்சியின் மூலதன நிதியில் ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பல்நோக்கு மையக் கட்டடத்தில் 2 நியாய விலைக் கடைகளைத் திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.

பின்னர், மாநகராட்சி மூலதன நிதியில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார மையக் கட்டடம், ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் பெண்கள் நவீன உடற்பயிற்சிக் கூடம், ரூ.38.50 லட்சம் மதிப்பீட்டில் குழந்தைகள் மையக் கட்டடம் என மொத்தம் ரூ.1.69 கோடி மதிப்பீட்டில் 3 புதிய திட்டப்பணிகளையும், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ஓட்டேரி, வாழைமா நகரில் உள்ள வேம்புலியம்மன் திருக்கோவில் திருப்பணியினையும் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.

மேலும், வார்டு-71, மேட்டுப்பாளையம், கோவிந்தன் தெருவில் வசிக்கும் 90 குடும்பங்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில், சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் ரூ.2.02 கோடி மதிப்பீட்டில் புதிய கழிவுநீர் வடிகால் வசதி மற்றும் சீரான புதிய குடிநீர் கட்டமைப்புகள் அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கி வைத்தார். இதற்காக இப்பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் அமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து நன்றிகளைத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, துறைமுகம் சட்டமன்றத் தொகுதி, ராயபுரம் மண்டலம், முத்தியால்பேட்டை, பி.ஆர்.என். கார்டன் பகுதியில் சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் ரூ.4.48 கோடி மதிப்பிட்டில் கட்டப்பட்ட தானியங்கி கழிவுநீர் நிலையத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். இதன் மூலமாக கழிவுநீர் அடைப்பு மற்றும் வழிந்தோடல்கள் முழுவதுமாக நீக்கப்பட்டு இப்பகுதியில் உள்ள சுமார் 52,480 நபர்கள் பயன்பெறுவார்கள்.

தொடர்ச்சியாக, வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.5.75 கோடி மதிப்பீட்டில் வடக்குச் சுவர் சாலை, அரசு சட்டக் கல்லூரி அருகில், சத்தியவாணி முத்துநகர் ஆகியவற்றில் புனரமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் உந்து நிலையங்கள் ஆகியவற்றைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். இதன் மூலமாக 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் கழிவுநீர் உந்து நிலையங்களில் உள்ள பழைய பம்புகள் மாற்றப்பட்டு அதிக அளவு உறிஞ்சுத் திறன் கொண்ட புதிய பம்புகள் மாற்றப்பட்டுள்ளது. கழிவுநீர் உந்து நிலையத்தில் வெளியேறும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த துர்நாற்ற கட்டுப்பாட்டு அமைப்பு பொருத்தப்பட்டும் மின் தடங்கல் ஏற்படும் நேரத்தில் தானியங்கியாக டீசல் ஜெனரேட்டர் இயங்குவதற்கான கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதிகளில் வசிக்கும் 1,81,175 நபர்கள் பயன்பெறுவார்கள். இக்கழிவுநீர் உந்து நிலையம் நாளொன்றுக்கு 11 மில்லியன் லிட்டர் கழிவுநீர் திறன் வெளியேற்றும் திறன் கொண்டதாகும்.

பின்னர், வார்டு-54, வ.உ.சி. சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டடத்தில் உள்ள நியாயவிலைக் கடையினைத் திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில், மேயர் ஆர்.பிரியா, திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், செயல் இயக்குநர் கௌரவ் குமார், வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் ஜெ. முல்லை, உதவி ஆணையாளர் புவனேஷ்வரி, மண்டலக்குழுத் தலைவர்கள் சரிதா மகேஷ்குமார், பி.ஶ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர்கள் புனிதவதி எத்திராஜன், வெ.பரிமளம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com