தூய்மைப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சமத்துவப் பொங்கல் பரிசுத் தொகுப்பு - அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்

இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வண்டியினை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.
தூய்மைப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சமத்துவப் பொங்கல் பரிசுத் தொகுப்பு - அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்
Published on

திரு.வி.க.நகர் மண்டலம் வார்டு-74க்குட்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட 550 நபர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு சமத்துவப் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

முதல்-அமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி, இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், சோமசுந்தரம் லைன் பகுதியில் இன்று (12.01.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் வார்டு-74க்குட்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சமத்துவப் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினார்.

முதல்-அமைச்சர் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் 2026 திருநாளை தமிழக மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு மற்றும் ரொக்கப் பரிசாக ரூ.3,000 வழங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நபர்களுக்கு முதல்-அமைச்சருடைய அறிவுறுத்தலுக்கிணங்க பல்வேறு நலத்திட்ட உதவிகளும் பொங்கல் பரிசுத் தொகுப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று திரு.வி.க.நகர் மண்டலம் வார்டு-74க்குட்பட்ட சோமசுந்தரம் லைன் பகுதியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், அனைத்து சமூக மக்கள் வைத்து கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்றார். மாட்டுப் பொங்கலை சிறப்பித்திடும் வகையில் பசு மாடு மற்றும் கன்றுகளுக்கு இனிப்பு கரும்பு மற்றும் பழங்களை வழங்கினார். பொங்கல் திருநாளில் முக்கிய விளையாட்டான உறியடி விளையாட்டினை மேயர் பிரியா உறியடித்து தொடங்கி வைத்தார்.

பின்னர், வார்டு-74க்குட்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட மொத்தம் 550 நபர்களுக்கு வேட்டி, சேலை, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு மற்றும் நெய் உள்ளடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினையும், இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வண்டியினை வழங்கி, அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை அமைச்சர் தெரிவித்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com