அரசு தானியங்கி பணிமனைகளை நவீனமயமாக்கும் திட்டம் - அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

இளநிலை உதவியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட 2 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
அரசு தானியங்கி பணிமனைகளை நவீனமயமாக்கும் திட்டம் - அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
Published on

சென்னை,

சென்னை மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறை இயக்குநரகத்தில் காஞ்சிபுரம், வேலூர், கடலூர் மற்றும் கோவை ஆகிய இடங்களில் செயல்படும் அரசு தானியங்கி பணிமனைகளை நவீனமயமாக்குதல் மற்றும் தரம் உயர்த்துதல், கோவை, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பணிமனைகளில் நவீன ரக வாகனங்களை பழுது நீக்கம் செய்திட மின்னணு பழுது கண்டறியும் கருவிகள் பயன்பாட்டிற்காக கொண்டு வருதல் ஆகிய திட்டங்களை தொடங்கி வைத்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இருவருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழக முதல்-அமைச்சரின் வழிகாட்டுதல்களின்படி போக்குவரத்து துறை அமைச்சர் 2024-25ஆம் ஆண்டிற்கான சட்டப் பேரவை போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை எண்.48-ல் அறிவித்தபடி காஞ்சிபுரம், வேலூர், கடலூர் மற்றும் கோவை ஆகிய இடங்களில் செயல்படும் அரசு தானியங்கி பணிமனைகளை நவீனமயமாக்குதல் மற்றும் தரம் உயர்த்துதல் திட்டத்திற்கு ரூ.40,00,000/- (ரூபாய் நாற்பது லட்சம் மட்டும்) செலவில் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசாணைகள் வெளியிடப்பட்டன.

அதனடிப்படையில் காஞ்சிபுரம், வேலூர், கடலூர் மற்றும் கோவை ஆகிய இடங்களில் செயல்படும் அரசு தானியங்கி பணிமனைகளை நவீனமயமாக்குதல் மற்றும் தரம் உயர்த்துதல் திட்டம் நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளவற்றை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரால் சென்னை தலைமைச் செயலகத்தில் 27.02.2026 அன்று துவக்கி வைக்கப்பட்டது.

மேலும் 2025-26ஆம் ஆண்டிற்கான சட்டப் பேரவை போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை எண்.48-ன் மூலம் ரூ.30,00,165/- (ரூபாய் முப்பது லட்சத்து நூற்று அறுபத்து ஐந்து மட்டும்) செலவில் அரசு தானியங்கி பணிமனை கோவை, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகியவற்றில் நவீன ரக வாகனங்களை பழுது நீக்கம் செய்திட மின்னணு பழுது கண்டறியும் கருவிகள் ஆகியவை போக்குவரத்துத் துறை அமைச்சரால் சென்னை தலைமைச் செயலகத்தில் துவக்கி வைக்கப்பட்டன.

மேலும் இவ்விழாவில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட இரண்டு நபர்களுக்கு பணி நியமன ஆணைகளும் போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை அரசு முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, மற்றும் அரசுத் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com