ஒழுக்கம் நிறைந்த மாணவர்களால் தான் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்; அமைச்சர் அர.சக்கரபாணி பேச்சு

ஒழுக்கம் நிறைந்த மாணவர்களால் தான் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று கள்ளிமந்தையத்தில் நடைபெற்ற பள்ளிக்கூட விழாவில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசினார்.
ஒழுக்கம் நிறைந்த மாணவர்களால் தான் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்; அமைச்சர் அர.சக்கரபாணி பேச்சு
Published on

ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையத்தில் உள்ள பிருந்தாவன் மெட்ரிக் பள்ளியில் 12-வது ஆண்டுவிழா நடந்தது. இந்த விழாவுக்கு பள்ளி தாளாளர் ஜெயசெல்வி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு, பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கும், மாநில அளவிலான வாலிபால் போட்டியில் 2-வது இடம் பிடித்த மாணவிகளுக்கும் பரிசு வழங்கி பாராட்டினார்.

பின்னர் அவர் பேசுகையில், தமிழக அரசு சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக காலை சிற்றுண்டி திட்டம், பள்ளி மாணவ-மாணவிகளின் திறனை மேம்படுத்தும் நான் முதல்வன் திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆகியவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பள்ளி மாணவ-மாணவிகள் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் கூறியது போன்று கனவுகள் காண வேண்டும். அந்த கனவுகளை செயல்படுத்த நம்பிக்கையுடன் முயற்சிக்க வேண்டும். ஒழுக்கம் நிறைந்த மாணவர்களால் தான் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும். அவர்கள் நல்ல தலைவர்களாகவும் மாறமுடியும் என்றார்.

பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளின் நடனம், விழிப்புணர்வு நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தனியார் டி.வி. பேச்சாளர் ராமகிருஷ்ணன், லீட் பள்ளி மேலாளர் சுபேத் அகமது, தொப்பம்பட்டி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ், தொப்பம்பட்டி ஒன்றிய துணை பெருந்தலைவர் தங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பள்ளி முதல்வர் முத்துவேல் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com