மீனவப் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்டங்களின் திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் ஸ்ரீநாத்

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை இயக்குநர் அலுவலகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
அமைச்சர் ஸ்ரீநாத்
Published on: 

சென்னை,

மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை இயக்குநர் அலுவலகத்தில் இன்று (04.11.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் மீனவப் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்டங்களின் திட்ட உதவிகளை வழங்கினார்.

நிவாரணத் தொகை உயர்வு

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க, கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மீனவர்களுக்கான மீன்பிடி குறைவுகால நிவாரணத் தொகை ரூ.6,000- யிலிருந்து ரூ.7,000- ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நடப்பு ஆண்டிலிருந்து (2026-27) மீனவர்களுக்கான மீன்பிடி குறைவுகால நிவாரணத் தொகை, குடும்பம் ஒன்றுக்கு ரூ.6,000- யிலிருந்து ரூ.7,000- ஆக உயர்த்தி வழங்கிட அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.98 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.7,000- வீதம் மொத்தம் ரூ.138.75 கோடி மீன்பிடி குறைவுகால நிவாரணத் தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தினை தொடங்கி வைக்கும் விதமாக, மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் மீனவப் பயனாளிகளுக்கு நிவாரணத்தொகை விடுவிப்பு ஆணைகளை வழங்கினார்.

மேலும், கடல் மீனவர் மற்றும் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் கடல் மீனவர் மற்றும் மீனவ மகளிர் தங்களது பங்குத் தொகையாக மொத்தம் ரூ.1,500- செலுத்துகின்றனர். பயனாளிகள் செலுத்தும் பங்குத் தொகைக்கு இருமடங்கு ஈடாக அரசின் பங்குத் தொகையாக ரூ.3,000- சேர்த்து மீன்பிடி குறைவு காலங்களில் நிவாரணத் தொகையாக மொத்தம் ரூ.4,500- ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.

ரூ.62.53 கோடி ஒதுக்கீடு

நடப்பாண்டு, கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் 2.08 லட்சம் மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிடும் பொருட்டு, அரசின் பங்குத் தொகையாக ரூ.62.53 கோடி அரசால் ஒப்பளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் தமிழகத்தை சேர்ந்த 2.02 லட்சம் மீனவ மகளிருக்கு நிவாரணத் தொகை வழங்கிடும் பொருட்டு, அரசின் பங்குத் தொகையாக ரூ.60.71 கோடி அரசால் ஒப்பளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டங்களை தொடங்கி வைக்கும் விதமாக இன்று (04.11.2026) மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை அமைச்சர் திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 27 மீனவ மக்களுக்கு சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம் மற்றும் சிறப்பு நிவாரண உதவித் தொகைகளை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்பிடும் வகையிலான ஆணைகளை வழங்கினார்கள்.

மேலும், இவ்விழாவில் மீனவர்கள் தாங்கள் பிடிக்கும் மீன்களை சந்தைப்படுத்தி, சுகாதாரமான முறையில் விற்பனை செய்து, அதிக வருவாய் ஈட்டிடும் வகையில், ரூ.75,000 என்ற அலகு விலையில் பொதுப்பிரிவினருக்கு 40 விழுக்காடு மானியம் மற்றும் மகளிர்/ பட்டியலிடப்பட்ட பிரிவினருக்கு 60 விழுக்காடு மானியம் என்ற அடிப்படையில் 35 மீனவர்களுக்கு குளிர்காப்பு பெட்டிகளுடன் கூடிய இருசக்கர வாகனங்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் வழங்கினார்கள்.

நலத்திட்டங்களை வழங்கினார் அமைச்சர்

கடலில் மீன்பிடிக்கும் போது காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கிடும் பொருட்டு சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 2 மீனவ குடும்பங்களுக்கு, சுழல் நிதியிலிருந்து தலா ரூ.2.00 லட்சத்திற்கான விடுவிப்பு ஆணைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் எம். எஸ். ரவி அவர்கள், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை, இயக்குநர், டாக்டர்.க.விஜயகார்த்திகேயன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை அலுவலர்கள் மற்றும் மீனவ பயனாளிகள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X