அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் அமைச்சர் திடீர் ஆய்வு66 மாணவர்களில் ஒருவரை கூட காணாததால் அதிருப்தி

பூந்தமல்லி அருகே அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் அமைச்சர் திடீர் ஆய்வு66 மாணவர்களில் ஒருவரை கூட காணாததால் அதிருப்தி
Published on

திருமழிசை,

திருமழிசை அடுத்த மேல்மணமேடு பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் இருந்தனர்.

அப்போது விடுதியில் தங்கி பயலும் மாணவர்களுக்காக காலை மற்றும் மதிய உணவுகள் பாத்திரங்களில் தயாராக இருந்தன. அதனை அமைச்சர் சாப்பிட்டு பார்த்து உணவின் தரம் எப்படி உள்ளது? என்பதை குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் மாணவர்களுக்கு சமையலுக்கு வேண்டிய மளிகை பொருட்கள் இருக்கும் அறையை திறந்து பார்க்கும் போது அங்கு குறைந்த அளவு மளிகை பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் மாணவர்கள் தங்கி இருக்கும் அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு மாணவர்கள் ஒருவர் கூட இல்லை. ஆனால் அவர்கள் பயன்படுத்தும் துணிகள் மட்டும் துவைத்து காய வைக்கப்பட்டிருந்தது. பின்னர் நூலகத்திற்குள் சென்று பார்த்த போது, அங்கு ஒரு புத்தகம் கூட இல்லாமல் காலியாக இருந்தது. மாணவர்கள் எங்கே ? என அமைச்சர் கேட்டபோது, மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு சென்று உள்ளார்கள். இரவு நேரத்தில் வீட்டுக்கு சென்று விடுவார்கள் என அங்கிருந்த ஊழியர்கள் கூறினர்.

அங்கிருந்த மாணவர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தபோது அதில் 66 மாணவர்கள், விடுதியில் தங்கி இருப்பதாகவும், அவர்களுக்கு தினமும் வேண்டிய உணவுகள் தயார் செய்து கொடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து அமைச்சர் கயல்விழி, பராமரிக்கப்பட்டு வந்த வருகைப்பதிவேட்டில் உள்ள தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்ட போது, எதிர்முனையில் பேசிய பெற்றோர், தனது மகன் தனியார் பள்ளியில் படிப்பதாகவும், அருகிலேயே வீடு இருப்பதால் விடுதியில் சேரவில்லை எனவும் கூறினர்.

பின் எதற்காக விடுதியில் சேர விண்ணப்பித்துள்ளீர்கள்? என கேட்டபோது, செல்போன் இணைப்பை துண்டித்து விட்டனர். இதனை எல்லாம் கண்ட அமைச்சர் அங்கிருந்த நோட்டு புத்தகத்தில், "விடுதியை ஆய்வு செய்ததில், உணவின் தரம் நன்றாக இருந்தது. மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது" என எழுதி வைத்துவிட்டு புறப்பட்டு சென்றார்.

'ஆளே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துற' என நடிகர் விவேக் ஒரு படத்தில் நகைச்சுவையாக கூறுவார். அந்த காட்சிக்கு ஏற்ப பூந்தமல்லி அருகே மாணவர்களே இல்லாத அரசு ஆதிதிராவிடர் நல விடுதியில் 66 மாணவர்கள் தங்கி இருப்பதாக கூறி, அவர்களுக்காக உணவு சமைத்து வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com