அரசு ஊழியர்களுடன் நாளை அமைச்சர் பேச்சுவார்த்தை

ஜன.,6 ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் துவங்கும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அறிவித்து இருந்தன.
அரசு ஊழியர்களுடன் நாளை அமைச்சர் பேச்சுவார்த்தை
Published on

சென்னை,

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும். அரசு துறைகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படும் என கடந்த சட்டசபை தேர்தலின் போது, தற்போதைய ஆளுங்கட்சி தரப்பில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

இவற்றை நம்பி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள், தி.மு.க., வுக்கு ஆதரவை அளித்தன. இந்தநிலையில், தி.மு.க., ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் முடிய உள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

சட்டசபை தேர்தல் நெருங்குவதால், அரசு ஊழியர்களின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், தற்செயல் விடுப்பு என்று தொடர் போராட்டத்தை ஆசிரியர் சங்கத்தினர் செயல்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து கடந்த டிச., 22 ல் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் வேலு, தங்கம் தென்னரசு, மகேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் பேச்சு நடத்தினர்.

இந்த பேச்சு தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து ஜன.,6 ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் துவங்கும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அறிவித்து இருந்தன. கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில், அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் நாளை ஜன.,2ல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களுடன் அமைச்சர் வேலு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். காலை 11 மணிக்கு போட்டோ ஜியோ அமைப்புடனும், 11:30 மணிக்கு ஜாக்டோ ஜியோ அமைப்புடனும் பேச்சு நடைபெற உள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களான போட்டா ஜியோ, ஜாக்டோ ஜியோ அமைப்புகளுடன் அமைச்சர் எ.வ.வேலு நாளை (ஜன.2) பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜன.6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com