

சென்னை,
வடகிழக்கு பருவமழை மற்றும் 2 புயல் எச்சரிக்கை தொடர்பாக மாநில அரசு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுகுறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என்றும், இந்த மழை தொடர்பாக 2 புயல்கள் மிரட்டுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இந்த பருவமழையை எதிர்கொள்ள மாநில அரசு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நிவாரண முகாம்கள்
மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் பொதுமக்கள் நலன் கருதி, 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 6 ஆயிரத்து 691 பிற நிவாரண முகாம்கள் உள்பட 6 ஆயிரத்து 812 முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்ட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடுதல் மழை
தமிழகத்தில் கடந்த 1-ந் தேதியில் இருந்து 7-ந் தேதி வரை நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகை, திருவாரூர், கடலூர், நீலகிரி, அரியலூர், விழுப்புரம், தேனி, தஞ்சாவூர், கோவை, சென்னை, புதுக்கோட்டை, காஞ்சீபுரம், திருவண்ணாமலை, திருப்பூர், திண்டுக்கல், சிவகங்கை, கன்னியாகுமரி, ஈரோடு, திருவள்ளூர், விருதுநகர், பெரம்பலூர், மதுரை, திருச்சி, நாமக்கல் மற்றும் வேலூர் ஆகிய 29 மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்தது.
இயல்பான மழையளவு 35.4 மில்லி மீட்டர், ஆனால் பெய்த மழையளவு 82 மில்லி மீட்டர். இது இயல்பை காட்டிலும் கூடுதலாக 132 சதவீதம் மழை பெய்தது.
மிரட்டும் 2 புயல்கள்
அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் உருவாகும் 2 புயல்கள் பற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிழக்கு, மத்திய மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து லுபான் என்ற புயலாக ஓமன் கடற்கரை நோக்கி நகருகிறது.
அதேபோன்று வங்கக்கடலில் தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி உள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்து 48 மணிநேரத்தில் ஒடிசா மாநிலத்தில் உள்ள கடற்கரையை அடையும்.
இந்த புயல் காரணமாக வடக்கு அரபிக்கடல் மற்றும் தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், கடலிலுள்ள மீனவர்கள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கடலில் சிக்கிய 509 மீனவர்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 646 படகுகளில் 514 படகுகள் கரை திரும்பி உள்ளன. மீதம் உள்ள 132 படகுகளில், 86 படகுகளில் சென்ற மீனவர்களுக்கு பருவமழை மற்றும் புயல் குறித்த எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எஞ்சிய 46 படகுகளில் உள்ள 509 மீனவர்களுக்கு மீனவர்கள் புயல் பற்றி இந்திய கடலோர காவல் படை, இந்திய கடற்படை, சரக்கு கப்பல்கள் மூலம் தகவல் தெரிவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
இந்த மீனவர்கள் கொச்சி கடற்கரையில் இருந்து 50 கடல் மைல் தொலைவிற்கு அப்பாலும், லட்சத்தீவிலுள்ள மஞ்சபாறை மீன்பிடி பகுதி மற்றும் ரத்தினகிரி கடற்கரை, தென்மேற்கு அரபிக்கடல் பகுதி, மங்களூரு கடற்கரையில் இருந்து மேற்கு திசையில் உள்ள 400 கடல் மைல் தொலைவு மற்றும் குளச்சல் கடற்கரையின் தென்மேற்கு பகுதியிலும் மீனவர்கள் இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
மதுரை, திருப்பூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் மேட்டூர், பவானிசாகர், பெரியார், அமராவதி, வைகை, பாபநாசம், மணிமுத்தாறு, பெருஞ்சாணி, பரம்பிக்குளம், ஆழியாறு, பேச்சிப்பாறை மற்றும் சோலையாறு அணையின் நீர்மட்ட அளவு அதிகரித்து உள்ளது. ஏனைய நீர்நிலைகளான கிருஷ்ணகிரி, சாத்தனூர் மற்றும் திருமூர்த்தி அணையின் நீர்மட்ட அளவு குறைந்துள்ளது.
நீர்மட்டம் உயர்வு
அதேபோல் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் சோழவரம் தவிர்த்து மீதம் உள்ள பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 3 ஏரிகளிலும் நீர் மட்டம் உயர்ந்து உள்ளது. தொடர்ந்து 3 மாதங்கள் பெய்ய உள்ள வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது பேரிடர் தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், இணை ஆணையர் லட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.