சென்னையில் நியாயவிலை கடைகள், மருந்தகங்களில் அமைச்சர் வ.காந்திராஜ் ஆய்வு

அத்தியாவசிய பொருட்களை எவ்வித எடை குறைபாடுமின்றி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
சென்னையில் நியாயவிலை கடைகள், மருந்தகங்களில் அமைச்சர் வ.காந்திராஜ் ஆய்வு
அமைச்சர் வ.காந்திராஜ் ஆய்வு
Published on: 

சென்னை,

சென்னையில் கூட்டுறவு எரிவாயு கிளை, மருந்தகம் மற்றும் நியாயவிலைக் கடைகளில் அமைச்சர் வ.காந்திராஜ் ஆய்வு செய்தார். மேலும் சேவைகளை மேம்படுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-

அமைச்சர் வ.காந்திராஜ் ஆய்வு

திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் சார்பில் செயல்பட்டு வரும் கோபாலபுரம் எரிவாயு கிளை, லக்ஷ்மிபுரம் கூட்டுறவு மருந்தகம், கோபாலபுரம் மற்றும் லக்ஷ்மிபுரம் நியாயவிலை கடைகள் ஆகியவற்றில் கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரம் மற்றும் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

எரிவாயு கிளை ஆய்வு

கோபாலபுரம் எரிவாயு கிளையில் நடைபெற்ற ஆய்வின்போது, e-KYC சரிபார்ப்புக்கு பிறகு உள்ள 6,615 வாடிக்கையாளர்கள் (வீட்டு உபயோகம் – 6,400, வணிகம் – 215) மற்றும் அம்மா உணவகம், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் ஆகியவற்றிற்காக வழங்கப்படும் 635 எரிவாயு உருளைகள் குறித்த விவரங்களை அமைச்சர் கேட்டறிந்தார்.

எரிவாயு உருளைகள்

மேலும், கிளையில் உள்ள எரிவாயு உருளைகளின் இருப்பு (227), காலி உருளைகளின் இருப்பு (241), அன்றைய தினம் (24.11.2026) மேற்கொள்ளப்பட்ட முன்பதிவுகள் (455) மற்றும் தினசரி விநியோகம் செய்யப்படும் உருளைகளின் எண்ணிக்கை (150 முதல் 200 வரை) ஆகியவற்றை ஆய்வு செய்தார். பொதுவாக முன்பதிவு செய்த 2 முதல் 3 நாட்களுக்குள் எரிவாயு உருளைகள் விநியோகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

அறிவுரைகள்

கிளையின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் வெடிப்பு தடுப்பு விளக்குகள் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்தவும், மழைக்காலம் முடிந்தவுடன் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி தரைத்தளம் அமைக்கவும், கிளை கட்டடத்தை புதுப்பிக்கவும், பேட்டரி மூலம் இயங்கும் வாகனத்தை பயன்படுத்துவது குறித்தும் அமைச்சர் உரிய அறிவுரைகளை வழங்கினார்.

கூட்டுறவு மருந்தகம் ஆய்வு

லக்ஷ்மிபுரம் கூட்டுறவு மருந்தகத்தில் மருந்துகளின் இருப்பு மற்றும் வகைகளை அதிகரித்து, பொதுமக்களின் தேவைக்கேற்ப மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், நவம்பர் மாத செலவினங்களை கருத்தில் கொண்டு மருந்தகத்தை லாபகரமாக செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், விற்பனையை அதிகரிப்பதற்கான எதிர்கால செயல்திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவும் சங்க மேலாண்மை இயக்குநருக்கு உத்தரவிட்டார்.

நியாயவிலை கடைகள் ஆய்வு

கோபாலபுரம் நியாயவிலை கடையில் 1,412 குடும்ப அட்டைகளும், லக்ஷ்மிபுரம் நியாயவிலை கடையில் 1,189 குடும்ப அட்டைகளும் உள்ள நிலையில், இரு கடைகளிலும் அத்தியாவசியப் பொருட்களின் தரம், எடை மற்றும் இருப்பு விவரங்களை அமைச்சர் ஆய்வு செய்தார்.

கட்டாயப்படுத்த கூடாது

அத்தியாவசிய பொருட்களை எவ்வித எடை குறைபாடுமின்றி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், கோதுமை மற்றும் கட்டுப்பாடற்ற பொருட்களை பொதுமக்களின் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே வழங்க வேண்டும்; அவற்றை வாங்குமாறு கட்டாயப்படுத்த கூடாது என்றும் விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

எடை குறைபாடு

கோபாலபுரம் நியாயவிலை கடையில் புழுங்கல் அரிசி மூட்டைகளில் எடை குறைபாடு கண்டறியப்பட்டதை தொடர்ந்து, கிடங்குகளிலிருந்து பொருட்களை அனுப்பும்போதே உரிய எடையை சரிபார்த்து அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தினார்.

லக்ஷ்மிபுரம் நியாயவிலை கடையில் பெண் விற்பனையாளர் ஒருவர் பணியாற்றி வருவதை கருத்தில் கொண்டு, கூடுதல் பணியாளர் ஒருவரை நியமிக்கவும், கடையில் உள்ள காலிக்கோணிகளை உடனடியாக அகற்றவும், கட்டுப்பாடற்ற பொருட்களின் விற்பனையை அதிகரிக்கவும் அமைச்சர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது கூட்டுறவுத்துறையின் உயர் அலுவலர்கள் மற்றும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுச் சங்க அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X