

சென்னை,
தமிழக சமூக நலத்துறை அமைச்சர் வன்னிஅரசு கடந்த 10-ந்தேதி கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சவாரி சென்றிருந்தார். அப்போது சவாரி வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய அவர், காட்டு யானை மற்றும் புலியின் அருகே சென்று அவற்றை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும், இதனை வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்டதாகவும் தகவல் பரவியது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, வனவிலங்குகளை அச்சுறுத்திய விவகாரத்தில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இதுகுறித்து பந்திப்பூர் வனத்துறை துணை பாதுகாவலர் நந்தீஷ் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறுகையில், அமைச்சர் வன்னி அரசு வனப்பகுதியில் சவாரி சென்றது உண்மைதான். ஆனால், தற்போது வைரலாகி வரும் வீடியோ பந்திப்பூர் வனப்பகுதியில் எடுக்கப்பட்டது அல்ல. தமிழகத்தில் உள்ள முதுமலை வனப்பகுதியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான வீடியோவாகும்.
அந்த வீடியோவில் பந்திப்பூர் சவாரி வாகனம் இடம்பெற்றிருப்பது உண்மைதான். ஆனால், பந்திப்பூரில் சவாரி சென்றபோது எடுக்கப்பட்ட வாகனத்தின் காட்சிகளையும், முதுமலையில் சவாரி சென்றபோது வாகனத்தில் இருந்து இறங்கிய காட் சிகளையும் ஒன்றாக இணைத்து ரீல்ஸ் தயாரித்துள்ளனர்.
பந்திப்பூர் வனப்பகுதியில் சவாரி வாகனத்தில் இருந்து கீழே இறங்குவதற்கு அனுமதியே கிடையாது. முதற்கட்ட விசாரணையில் இந்த சம்பவம் பந்திப்பூரில் நடை பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், தங்களது சவாரி வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா பதிவுகளை மீண்டும் ஆய்வு செய்ய உள்ளோம் என்றார்.