நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைமை அலுவலக புனரமைப்புப் பணிகள் - அமைச்சர் வெங்கடரமணன் ஆய்வு

அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள் தங்களது பணியிடங்களை எப்போதும் சுத்தமாகவும் முறையாக பராமரிக்க வேண்டும்.
நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைமை அலுவலக புனரமைப்புப் பணிகள் - அமைச்சர் வெங்கடரமணன் ஆய்வு
Published on

சென்னை,

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைமை அலுவலக பழைய கட்டிடத்தில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளை இன்று(வெள்ளிக்கிழமை) உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தேவையற்ற தளவாடங்கள்

ஆய்வின்போது, அமைச்சர் வெங்கடரமணன் தலைமை பொறியாளரிடம் சம்பந்தப்பட்ட அலுவலருடன் ஒருங்கிணைத்து பணிகளை விரைவுபடுத்தி நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் முழுமையாக நிறைவு செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மேலும், தேவையற்ற பழைய உபயோகமில்லாத பொருட்களின் தேக்கத்தால் பணி செய்ய உகந்த சூழல் இல்லாமல் உள்ளதாக கூறினார். புனரமைப்புப் பணிகள் நடைபெறும் வளாகத்தில் உள்ள தேவையற்ற தளவாடங்கள், பயன்படுத்தப்படாத இருக்கைகள் முதலியன அகற்ற உத்தரவிட்டார்.

பராமரிப்பு நடைமுறை

புனரமைப்புப் பணி நடைபெறும் கட்டிடத்துடன் இணைந்துள்ள அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது பணியிடங்களை எப்போதும் சுத்தமாகவும் முறையாக பராமரிக்க வேண்டும் என்றும், சிறந்த அலுவலகச் சூழலை உருவாக்க தேவையான சுகாதார மற்றும் பராமரிப்பு நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கட்டணமில்லா தொலைபேசி எண்

தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் உழவர் உதவி மையத்தை பார்வையிட்ட அமைச்சர் விவசாயிகள் பயன்பாட்டிற்காக செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 3540 மற்றும் வாட்ஸ் அப் எண் 95008 02465 ஆகியவை முறையாக செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்தார். மேலும், நெல் கொள்முதல் மற்றும் பொது விநியோகத் திட்டம் தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்படும் முறை, அவற்றின் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் தீர்வு காணப்படும் நடைமுறைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

நடவடிக்கை

அத்துடன், மேற்கண்ட தொடர்பு எண்களை பொதுமக்கள் எளிதில் அறியும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலக வளாகத்திலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்கள், நெல் சேமிப்பு கிடங்குகள் தெளிவாக விளம்பரப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

கட்டுப்பாட்டு அறை

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான வட்ட செயல்முறை கிடங்குகள் மற்றும் நவீன அரிசி ஆலைகளின் செயல்பாடுகளை தலைமை அலுவலகத்திலிருந்தே கண்காணிக்கும் சிசிடிவி கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார். அப்போது, கிடங்குகள் மற்றும் நவீன அரிசி ஆலைகளில் பொருத்தப்பட்டுள்ள பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்களை உடனடியாக பழுதுநீக்கம் செய்து, அனைத்து கேமராக்களும் முழுமையான செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைமைப் பொறியாளர் சுகுமாரன் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com