வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குறித்து அமைச்சர் விஜய் பாலாஜி ஆய்வு

நாய்கள் கருத்தடை மையம் மற்றும் செல்லப்பிராணிகள் மருத்துவமனைக் கட்டடத்தினை திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குறித்து அமைச்சர் விஜய் பாலாஜி ஆய்வு
Published on: 

சென்னை,

கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜி, இன்று அம்பத்தூர் மண்டலம், வார்டு-86க்குட்பட்ட அத்திப்பட்டு திடக்கழிவு வளாகத்தில் மூலதன நிதியில் ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் 5,300 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட நாய்கள் கருத்தடை மையம் மற்றும் செல்லப்பிராணிகள் மருத்துவமனைக் கட்டடத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

இம்மையத்தில் அறுவை சிகிச்சை, ஆய்வகம், மருந்து கிடங்கு, செல்லப்பிராணி சிகிச்சை அறை, 150 எண்ணிக்கையில் நாய்கள் பராமரிக்கும் கூண்டுகள், 100 அறைகள், சமையல் அறை, மருத்துவர் அறை மற்றும் கழிவறை வசதிகள், நாள்தோறும் 35 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் இடவசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர் மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் பிடிக்கப்படும் தெருநாய்களுக்கு இங்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம், சோழிங்கநல்லூர், செட்டிமேடு I மற்றும் II, திருவொற்றியூர், மாதவரம், கண்ணப்பர் திடல், பெருங்குடி, நந்தம்பாக்கம், பள்ளிக்கரணை ஆகிய 13 இடங்களில் நாய்கள் கருத்தடை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து, 14ஆவது இடமாக அம்பத்தூர் மண்டலம், அத்திப்பட்டு, திடக்கழிவு வளாகத்தில் அமைக்கப்பட்டு இன்று பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், சோழிங்கநல்லூர் மண்டலம் பயோ சி.என்.ஜி. பிளான்ட் அருகில் ஒரு புதிய நாய்கள் கருத்தடை மையம் மற்றும் செல்லப்பிராணி மருத்துவமனை கட்டப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து அமைச்சர், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்பத்தூர் மண்டலம், வார்டு-85க்குட்பட்ட பி.எஸ்.என்.எல். அம்பத்தூர் டெலிபோன் எக்சேன்ஜ் சந்திப்பில் நீர்வளத்துறையின் சார்பில் குக்சன் சாலை முதல் கூவம் ஆறு வரை ரூ.130 கோடி மதிப்பீட்டில் 5.10 கி.மீ. நீளத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், வார்டு-88க்குட்பட்ட சென்னை திருவள்ளூர் நெடுஞ்சாலை, பாடி பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, அண்ணாநகர் மண்டலம், வார்டு-104க்குட்பட்ட திருமங்கலம் சாலைப் பகுதியில் பாடி 100 அடி சாலையிலிருந்து அண்ணாநகர் மண்டலம், திரு.வி.க நகர் மண்டலங்களின் வழியாகச் சென்று இராயபுரம் மண்டலம் பக்கிங்ஹாம் கால்வாயில் இணையும் வகையில் 10.81 கிலோமீட்டர் நீளத்திலான ஓட்டேரி நல்லா கால்வாயில் தூர்வாரி, மழைநீர் வடிகால் தடுப்புச் சுவர் கட்டுதல், உயர்த்திக் கட்டுதல் மற்றும் தடுப்புவேலி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் ரூ. 66.27 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருவதின் ஒரு பகுதியாக, அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட திருமங்கலம் சாலைப் பகுதியில் உள்ள ஓட்டேரி நல்லா கால்வாயில் 500 மீட்டர் நீளத்திற்கு தடுப்புச் சுவர் உயர்த்திக் கட்டும் பணி நடைபெற்று வருவதைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-109க்குட்பட்ட மேற்கு நமச்சிவாயபுரம் பகுதியில் நெல்சன் மாணிக்கம் சாலையில் விருகம்பாக்கம் கால்வாய் மற்றும் டிரஸ்ட்புரம் கால்வாய் கூவம் ஆற்றில் சேரும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வண்டல்கள் தூர்வாரும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை தொடர்ந்து கண்காணித்து சேரும் வண்டல்களை உடனுக்குடன் அகற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், வார்டு-110க்குட்பட்ட குளக்கரை சாலையில் உள்ள மழைநீர் வடிகாலில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வுகளில், சட்டமன்ற உறுப்பினர்கள் க. பாலமுருகன் (அம்பத்தூர்), வி.கே.ராம்குமார் (அண்ணாநகர்) மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com