சென்னையில் 82 நடமாடும் மருத்துவக்குழு மூலம் சிகிச்சை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருப்பதால் சென்னையில் 82 நடமாடும் மருத்துவக்குழு மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னையில் 82 நடமாடும் மருத்துவக்குழு மூலம் சிகிச்சை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
Published on

சென்னை,

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனை வளாகத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார்.

இதில் வருவாய் நிர்வாக கமிஷனர் சத்யகோபால், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் டாக்டர் மதுசூதனரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக சி.விஜயபாஸ்கர் நடமாடும் மருத்துவக்குழு மற்றும் கொசு ஒழிப்பு விரைவு குழுக்கள் அடங்கிய 82 வாகனங்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை தொடங்கி வைத்து அவர் பார்வையிட்டார்.

பின்னர் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:-

நடமாடும் மருத்துவக்குழுக்கள்

தமிழகத்தில் பருவமழை காலத்தில் தொற்றுநோய் பரவுவது பெரும் சவாலாக உள்ளது. தமிழக அரசு சார்பில் கடந்த 3 மாதங்களாக பல்வேறு ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதன்மூலம் அண்டை மாநிலங்களிலும், வடமாநிலங்களிலும் தொற்றுநோய்கள் பரவ தொடங்கியும், தமிழகத்தில் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

சென்னையில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளதால், சுகாதாரத்துறை சார்பில் 82 நடமாடும் மருத்துவக்குழுக்கள் களத்தில் இறக்கிவிடப்பட்டு உள்ளன. இந்த மருத்துவக் குழுக்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும், புறநகர் பகுதியிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களுக்கு சென்று சிகிச்சை அளிப்பார்கள்.

7 நாட்கள் சிகிச்சை

பொதுமக்கள் வெறும் காய்ச்சல் தான் என்று கவனக்குறைவாக இருந்துவிடாமல், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். டெங்கு காய்ச்சல் பாதித்த குழந்தைகளுக்கு முதல் 3 நாட்களுக்கு காய்ச்சல் அதிகமாக இருக்கும். அடுத்த 2 நாட்கள் காய்ச்சல் இருக்காது. காய்ச்சல் குறைந்துவிட்டது என்று நினைத்து குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கோ, வெளியில் விளையாடவோ அனுப்பக் கூடாது.

டெங்கு காய்ச்சல் பாதித்த 4 மற்றும் 5-ம் நாள் வைரஸ் தாக்கம் வெளியே தெரியாமல் இருக்கும். இந்த நாட்களில் வெளியே செல்வது நோய் தாக்கத்தை அதிகப்படுத்தும். எனவே காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களை 5 முதல் 7 நாட்கள் மருத்துவமனையில் அனுமதித்து கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்.

கடும் நடவடிக்கை

நோய் பாதிப்பு அதிகம் உள்ளவர்களை படுக்கை வசதி இல்லாத மருத்துவமனையில் அனுமதிக்கக்கூடாது என்று அனைத்து மருத்துவர்களுக்கும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொசு புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் தங்களது இடங்களை வைத்திருப்பவர்கள் மீது சுகாதாரத்துறை சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் டாக்டர் பரிந்துரை இல்லாமல் மருந்து வழங்கும் மருந்து கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com