

சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
கும்பகோணம் மாநகராட்சியில் பட்டீஸ்வரம் திறந்தவெளி சேமிப்பு மையம், கும்பகோணம் (கொட்டையூர்) ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், கும்பகோணம் வட்டம், சோழன் மாளிகை நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஆகியவற்றை வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் (07.06.2026) அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது.
பட்டீஸ்வரம் திறந்தவெளி சேமிப்பு மையத்தில் தள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பட்டீஸ்வரம் திறந்தவெளி சேமிப்பு மையம் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்து சுமார் 30,000 மெட்ரிக் டன் நெல் சேமிப்பு கொள்ளளவைக் கொண்டுள்ளது. தற்போது 25,000 மெட்ரிக் டன் நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 5,000 மெட்ரிக் டன் மட்டுமே சேமிக்க இயலும். எனவே, நடப்பு கோடை குருவை பருவத்தில் கொள்முதல் செய்யப்பட உள்ள சுமார் 3.00 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்காக, கும்பகோணம் வட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான சுமார் 50 ஏக்கர் நிலத்தை திறந்தவெளி சேமிப்பு மையமாக பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
இம்மையத்தில் சுமார் 250 நெல் அட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. திடீர் மழை ஏற்படும் சூழ்நிலையில் அனைத்து அட்டிகளையும் உடனடியாக B.P. Cover கொண்டு மூடுவதற்கு தேவையான அளவு சுமைப்பணியாளர்களை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
தண்டந்தோட்டம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான சுமார் 10 ஏக்கர் நிலத்தை குத்தகை அடிப்படையில் பெற்று, நிரந்தர நெல் சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்.
ஒரு நெல் அட்டி முழுமையாக காலி செய்யப்பட்ட பின்னர், அதன் அடிப்பகுதியில் சிதறியுள்ள நெல்மணிகளை முழுமையாக சேகரித்து, சுத்தம் செய்து, புதிய சாக்குகளில் பிடித்து அனுப்பும் பணியை முறையாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், நெல் இழப்புகளை முற்றிலும் தவிர்க்கும் வகையில் சேமிப்பு மற்றும் கையாளும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, கும்பகோணம் (கொட்டையூர்) ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மூப்பக்கோவில் குளத்தை உடனடியாக தூர்வாருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் காலியாக உள்ள இடங்களில் தூய்மை பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு, மரக்கன்றுகள் மற்றும் பூச்செடிகள் நடுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
காலியாக உள்ள இடங்களை முறையாக அளவீடு செய்து, தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான திட்டங்களைத் தயாரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தி, விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், கும்பகோணம் வட்டம், சோழன் மாளிகை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் (DPC) திடீர் ஆய்வு மேற்கொண்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் விவசாயிகளிடமிருந்து கொண்டு வரப்படும் நெல்மணிகளை எவ்வித தாமதமும் இன்றி உடனுக்குடன் கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழைக்காலத்தை முன்னிட்டு, நெல்மணிகள் நனைந்து முளைத்து சேதமடையாமல் பாதுகாக்க தேவையான அளவு தார்பாய்கள் இருப்பில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். நெல் கொள்முதல் பணிகளுக்கு தேவையான சணல் சாக்குகள் மற்றும் இதர தளவாடப் பொருட்கள் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்து, கொள்முதல் பணிகளில் எவ்வித தடையும் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த ஆண்டு மழையால் நெல்மணிகள் நனைந்து முளைத்ததாக புகார்கள் பெறப்பட்டதாகவும், இவ்வாண்டு அவ்வாறான புகார்கள் ஏதும் வராத வகையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு நெல் கொள்முதல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.. முதன்முறையாக நெல் விற்பனை செய்யும் விவசாயிகளின் பெயர் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை DPC மென்பொருளில் பதிவேற்றம் செய்யும் போது பிழைச் செய்திகள் (Error Messages) வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து உரிய தொழில்நுட்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு பிரச்சினையை விரைவாக தீர்க்குமாறும், புதிதாக கட்டப்படவுள்ள நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலைய (DPC) கட்டிடங்களுக்காக நிலம் தேர்வு செய்யப்பட்டு தயாராக உள்ள இடங்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தினார்.
மேலும், 2024–25 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 50 நிரந்தர DPC கட்டிடங்கள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 13 DPC கட்டிடங்கள் அமைப்பதற்காக இடங்கள் தேர்வு செய்யப்பட்டு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு DPC கட்டிடத்திற்கும் ரூ.30.00 லட்சம் மதிப்பீட்டில், ஊரக வளர்ச்சித் துறை மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் தெரிவித்தார்கள்.
இந்த ஆய்வின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் நெ.செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.