அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் தற்கொலை; வருமானவரித்துறை சோதனை நடந்த ஒரு மாதத்தில் துயர முடிவு

நாமக்கல் அருகே வருமானவரித்துறை சோதனை நடந்த ஒரு மாதத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரான காண்டிராக்டர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் தற்கொலை; வருமானவரித்துறை சோதனை நடந்த ஒரு மாதத்தில் துயர முடிவு
Published on

மோகனூர்,

நாமக்கல் ஆசிரியர் குடியிருப்பில் வசித்து வந்தவர் சுப்பிரமணியன் (வயது 58). காண்டிராக்டர். இவர் அரசு கட்டிட பணிகளை காண்டிராக்ட் எடுத்து நிறைவேற்றி வந்தார்.

இவரது மனைவி சாந்தி (48). இவர்களுக்கு அபிநயா (28) என்ற மகளும், சபரி (25) என்ற மகனும் உள்ளனர். அபிநயாவுக்கு திருமணமாகி சேலத்தில் கணவருடன் வசித்து வருகிறார். சபரி என்ஜினீயரிங் முடித்து விட்டு தந்தைக்கு உதவியாக இருந்து வருகிறார்.

பண்ணை வீடு

காண்டிராக்டர் சுப்பிரமணியனுக்கு மோகனூர் அருகே உள்ள செவிட்டுரங்கன்பட்டியில் பண்ணை வீடு ஒன்று உள்ளது. இங்கு அவர் அடிக்கடி சென்று வருவது உண்டு. நேற்று முன்தினம் இரவு மோகனூர் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. எனவே நேற்று காலையில் சுப்பிரமணி, தனது பண்ணை வீட்டுக்கு சென்று அங்கு விவசாய நிலங்களில் மழையால் ஏதேனும் பாதிப்பு உள்ளதா? என பார்வையிட்டார்.

பின்னர் ஓய்வு எடுத்து வருவதாக கூறிவிட்டு பண்ணைவீட்டில் சென்று படுத்து உள்ளார். சிறிது நேரம் கழித்து பண்ணை வீட்டில் மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் வடிவேல் அங்கு சென்று பார்த்தபோது காண்டிராக்டர் சுப்பிரமணியன் மயக்க நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பக்கத்து தோட்டத்தை சேர்ந்த செல்வம் என்பவரின் உதவியுடன் சுப்பிரமணியனை நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்த்தார். அங்கு சுப்பிரமணியனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

விஷம் குடித்து தற்கொலை

இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் சுப்பிரமணியனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கூடினர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் சுப்பிரமணியனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே அவரது மகன் சபரி இந்த சம்பவம் குறித்து மோகனூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகார் மனுவில் மயக்க நிலையில் இருந்த தனது தந்தை இறந்து விட்டார். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். அதன்பேரில் மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே பிரேத பரிசோதனையின் போது காண்டிராக்டர் சுப்பிரமணியன் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு ஆதாரமாக குளிர்பான பாட்டில் ஒன்றை பண்ணை வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றி இருப்பதாக தெரிகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே இதனை உறுதி செய்ய முடியும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் காண்டிராக்டர் சுப்பிரமணியன் தற்கொலை செய்ய காரணம் என்ன? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வருமானவரித்துறை சோதனை

காண்டிராக்டர் சுப்பிரமணியன் சாவு குறித்து அவரது நண்பர்கள் சிலர் கூறியதாவது:-

கடந்த மாதம் 7-ந் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரான காண்டிராக்டர் சுப்பிரமணியன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது அவரது வீட்டில் இருந்து சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

மேலும் வங்கி கணக்கையும் முடக்கி விட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக சுப்பிரமணியன் சென்னை வருமானவரித்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு சென்று வந்த நிலையில் இருந்தார். இதனால் அவர் மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்பட்டார். எனவே அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று கருதுகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சபரிமலை பயணம்

மேலும் அவர்கள் கூறும்போது, நாங்கள் ஆண்டுதோறும் சபரிமலைக்கு சாமிதரிசனம் செய்ய செல்வது உண்டு. அந்த வகையில் காண்டிராக்டர் சுப்பிரமணியன் உள்பட அனைவரும் வருகிற 17-ந் தேதி சபரிமலைக்கு புறப்பட இருந்தோம். இந்த சூழ்நிலையில் சுப்பிரமணியன் இறந்து விட்டார் என கண்ணீர் மல்க அவர்கள் கூறினர்.

புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை காண்டிராக்டர் சுப்பிரமணியன் செய்து வந்தார். இதனாலேயே கடந்த மாதம் 7-ந் தேதி அவரது வீட்டில் வருமானவரி துறையினர் சோதனை நடத்தினர் என போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

வருமானவரி துறையினரின் சோதனை முடிந்து சுமார் ஒரு மாத காலத்திற்குள் காண்டிராக்டர் சுப்பிரமணியன் தற்கொலை செய்துகொண்ட துயர முடிவு உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com