கரூரில், ரூ.40 கோடியில் புதிய பஸ்நிலையம் அமைப்பதற்கு பூமிபூஜை: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

கரூர் திருமாநிலையூல் ரூ.40 கோடியில் புதிய பஸ்நிலையம் அமைப்பதற்கான பூமிபூஜையை அமைச்சர்கள் வி.செந்தில்பாலாஜி, தா.மோ.அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கரூரில், ரூ.40 கோடியில் புதிய பஸ்நிலையம் அமைப்பதற்கு பூமிபூஜை: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
Published on

பூமி பூஜை

கரூர் திருமாநிலையூரில் ரூ.40 கோடியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மேயர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, சிறு, குறு, நடுத்தர நிறுவனத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தனர்.

விழாவில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றவுடன் கரூரில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை இப்பொழுது நிறைவேற்றி தந்திருக்கின்றார்கள். குறிப்பாக பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இந்த புதிய பஸ் நிலையம் அமைக்கக்கூடிய பகுதிகளுக்கு ரூ. 40 கோடி நிதியை கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் ஒதுக்கீடு செய்து உடனடியாக அந்தப் பணிக்கான டெண்டர் முடிக்கப்பட்டு மாநகராட்சி மன்றத்தில் ஒப்புதல் பெற்று அந்த பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

அரணாக இருக்க வேண்டும்

கரூர் பஸ் நிலையம் இப்போது நகர பஸ்கள் நின்று செல்லக்கூடிய வகையில் நகரப் பஸ் நிலையமாகவும், இன்றைய புதிய பஸ் நிலையம் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பஸ் நிலையம் என்ற பெயரில் மாநகராட்சியினு டைய தீர்மானத்தோடு புதிய நவீன வசதிகள் கொண்ட குறிப்பாக 85 பஸ்கள் நிறுத்தக்கூடிய அளவிற்கு புதிய கட்டமைப்பு வடிவமைப்புகளை கொண்டிருக்கின்றன. இன்னும் சிறப்புகளை சொல்ல வேண்டும் என்று சொன்னால் நகரப் பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு வருவதற்கு 2 கிலோமீட்டர் தான். நடந்து கூட இங்கு வந்து விடலாம். அதேபோல ரெயில்வே ஜங்ஷனுக்கு போக வேண்டும் என்றால் 3.6 கிலோ மீட்டர் தான். இந்த புதிய பஸ் நிலையத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றால் 4.4 கிலோமீட்டர் தூரம் தான்.

மாநகராட்சியினுடைய அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றால் 1.6 கிலோமீட்டர். இப்படி ஒட்டுமொத்தமாக மையத்தின் அதாவது கரூர் மாநகராட்சியினுடைய மையப் பகுதியில் வந்து செல்லக்கூடிய பொது மக்களுக்கு எளிதில் வந்து செல்லக்கூடிய அளவிற்கு இந்த பஸ் நிலையத்தை அமைப்பதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டு உள்ளது. ஆட்சி பொறுப்பேற்ற இந்த 15 மாத காலத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவிற்கு கரூருக்கு வளர்ச்சி திட்டங்களை முதல்-அமைச்சர் வழங்கி இருக்கிறார்கள். இன்னும் ஒரு சில நாட்களில் ரூ.ஆயிரம் கோடி திட்டங்களை கரூர் மாவட்டத்திற்கு வழங்க இருக்கின்றார்கள். எனவே நம்முடைய பகுதி மக்கள் அனைவரும் முதல்-அமைச்சருக்கு அரணாக இருக்க வேண்டும் என்றார்.

மக்களின் தேவைகள்

அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசியதாவது:- நாங்கள் அனைவரும் 10, 15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கரூர் மாவட்டத்திற்கு வந்துள்ளோம். எந்த நிலையில் இருந்தது என்று நாங்கள் அறிவோம். ஆனால் இந்த ஒரு ஆண்டு காலத்திற்குள் பல்வேறு திட்டங்கள். கரூர் மாவட்டத்தைபொறுத்தவரை சிறு தொழில் மாவட்டமாக அதிகமாக இருக்கின்ற பகுதி. அது வளர்ச்சி பெற்றால் தான் மாவட்டங்கள் மேலும் வளர்ச்சி பெறும் என்ற வகையில் நம்முடைய ஆட்சியில் முருங்கைக்கு ஆய்வு பூங்கா வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள். இடம் கொடுத்தால் அதையும் நாங்கள் நிறைவேற்றிக் கொடுப்போம், என்றார்.

இதில், கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், கழகச்செயலாளர்கள் கனகராஜ் (கரூர் மாநகரம்), கரூர் கணேசன் (வடக்கு), சுப்பிரமணியன் (தெற்கு), அன்பரசன் (மேற்கு), ராஜா (கிழக்கு), மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கமேடு சக்திவேல், அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நலத்திட்ட உதவிகள்

கரூர் காந்திகிராமம் தெரசா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், வி.செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு 224 பயனாளிகளுக்கு ரூ.18 கோடியே 93 லட்சத்து 60 ஆயிரத்து 54 மதிப்பீட்டில், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் கருணைத்தொகையுடன் வீடு கட்டுவதற்கான ஆணைகளையும், மாவட்ட தொழில் மையம் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவியும் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

புதிய காற்றாலை பூங்கா

வெள்ளியணையில் 50 மெகா வாட் திறன் கொண்ட புதிய காற்றாலை பூங்கா தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, தா.மோ. அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய காற்றாலை பூங்காவை திறந்து வைத்து பேசினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com