கொரோனா சிகிச்சை முடிந்து அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன் வீடு திரும்பினர்

கொரோனா சிகிச்சை முடிந்து அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு திரும்பி சென்றார்கள்.
கொரோனா சிகிச்சை முடிந்து அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன் வீடு திரும்பினர்
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்திடவும், கொரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்தவும் அமைச்சர்கள் கொண்ட குழுவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். சென்னை மாநகராட்சியில் உள்ள அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 3 மண்டலங்களுக்கு உயர் கல்விதுறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நியமிக்கப்பட்டார்.

அவர் அந்த மண்டலங்களில் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார். கடந்த மாதம் 17-ந் தேதி அமைச்சர் கே.பி.அன்பழகன் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். உடனடியாக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஆரம்ப அறிகுறியுடன் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த மாதம் 30-ந் தேதி மீண்டும் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு சளியுடன் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். ஒரு வாரத்துக்கு முன்பு அவர் குணமடைந்தார். எனினும் ஆஸ்பத்திரியிலேயே தங்கி ஓய்வு பெற்று வந்தார். கடந்த 16-ந் தேதி சென்னையில் பத்திரிகையாளர்களை சந்திப்பதற்காக ஆஸ்பத்திரியில் இருந்து சென்ற அமைச்சர் கே.பி.அன்பழகன், அதன்பிறகு மீண்டும் ஆஸ்பத்திரிக்கு வந்து ஓய்வுபெற்றார்.

இந்தநிலையில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பூரண குணமடைந்தார். இதையடுத்து அமைச்சர் கே.பி.அன்பழகன், நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

இது தொடர்பாக மியாட் ஆஸ்பத்திரியின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரித்வி மோகன்தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மியாட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை ஆஸ்பத்திரி வளாகத்தில் தங்கி இருந்தார். தற்போது முழுமையாக குணமடைந்த நிலையில் அவர் இன்று(அதாவது நேற்று) வீடு திரும்புகிறார் என கூறப்பட்டு இருந்தது.

மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தார். அவரும் குணமடைந்து நேற்று வீடு திரும்பினார்.

அப்பல்லோ மருத்துவமனை மருத்துவ சேவைகள் இயக்குனர் டாக்டர் ஆர்.கே.வெங்கடாச்சலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி கொரோனா தொற்று காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 8-ந்தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். நல்ல சிகிச்சைக்குப்பிறகு முழுமையாக குணமடைந்து நேற்று அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செல்லூர் ராஜு, அவருடைய மனைவி ஜெயந்தி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனி, தி.மு.க. எம்.எல்.ஏ. அரசு ஆகியோரும் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com