'ரெயில் பயணங்களில் பாதுகாப்பை உறுதிசெய்ய ரெயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' - உதயநிதி ஸ்டாலின்

ரெயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
'ரெயில் பயணங்களில் பாதுகாப்பை உறுதிசெய்ய ரெயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' - உதயநிதி ஸ்டாலின்
Published on

சென்னை,

மதுரை ரெயில் நிலையம் அருகே உத்தர பிரதேசத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தமிழகத்திற்கு வந்த சுற்றுலா ரெயிலில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரெயிலில் சுற்றுலா பயணிகள் கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி சமையல் செய்தபோது, அது வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து மதுரை கலெக்டர் சங்கீதா நேரில் சென்று ஆய்வு செய்தார். ரெயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ரெயில் பயணங்களில் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மத்திய ரெயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"மதுரை ரயில் நிலையத்தில் சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தது மிகுந்த வேதனையைத் தருகிறது. இந்த கோர தீ விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கல்.உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆறுதலை தெரிவிக்கும் அதேவேளையில், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் நலம்பெற விரும்புகிறோம். ரயில் பயணங்களில் மக்கள் பாதுகாப்பினை உறுதிசெய்ய ஒன்றிய ரயில்வே அமைச்சகம் உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்."

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com