

வாணியம்பாடி,
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதியில் மாந்தோப்புகள் அதிகம் உள்ளன. இங்கிருந்து வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியில் உள்ள ஒரு மாம்பழ சாறு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு குப்பத்தில் உள்ள தோப்பிலிருந்து தொழிலாளர்கள் மாங்காய்களை ஏற்றினர். அந்த லாரி அங்கிருந்து புறப்பட்டு திம்மாம்பேட்டை வழியாக நாட்டறம்பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது. லாரியில் டிரைவர் அருகிலும், அதில் ஏற்றப்பட்டிருந்த மாங்காய்கள் மீதும் வியாபாரிகள், தொழிலாளர்கள் என 32 பேர் அமர்ந்திருந்தனர்.
ஆந்திர-தமிழக எல்லையில் மலைப்பாதை வழியாக நாயனூர் என்ற இடத்தின் அருகே லாரி நேற்று இரவு 9.30 மணியளவில் வந்தபோது மலைப்பாதையில் உள்ள திருப்பத்தில் திரும்ப முயன்றபோது எதிர்பாராதவிதமாக லாரி 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வாணியம்பாடி மற்றும் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விபத்தில் சிக்கி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாராயணன் (30) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயிரிழந்துள்ளது. மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.