சிறுமி பாலியல் வன்கொடுமை: தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கு.. பீகாரை சேர்ந்தவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

போக்சோ, கொலை உள்ளிட்ட 4க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை
Published on

கும்மிடிப்பூண்டி,

வடமாநில தொழிலாளர்கள்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்கள் பெருமளவில் வேலை செய்து வருகின்றனர்.

இதனையடுத்து சிப்காட் பகுதி அருகேவுள்ள புதுப்பேட்டை என்ற பகுதியில் பீகார், உத்தரபிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் குடும்பத்தோடும், தனியாகவும் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.

3 வயது குழந்தை

இதற்கிடையே இந்த பகுதியில் 3 வயது பெண் குழந்தை திடீரென மாயமானது. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர், குழந்தையை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.

இதற்கிடையே அந்தப்பகுதியில் உள்ள முட்புதரில் இயற்கை உபாதை கழிக்கச்சென்ற பெண்கள் சிலர், மாயமான குழந்தை கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

ரத்தக்காயங்களுடன் கிடந்த குழந்தையை உடனே மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது.

வடமாநில வாலிபர்

இதற்கிடையே குழந்தையின் வீட்டின் அருகில் வசித்து வந்த பீகாரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர்தான் பிஸ்கெட் வாங்கித்தருவதாக கூறி குழந்தையை தனியாக அழைத்து சென்றது தெரியவந்தது. முட்புதரில் வைத்து குழந்தையை அந்த வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட வடமாநில வாலிபர் பிபின் மஞ்சி (வயது 19) என்பவரை பொதுமக்களே மடக்கிப்பிடித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸ் நிலையம் முற்றுகை

பின்னர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது ஒரே அறையில் இருந்த 4 வடமாநில வாலிபர்கள் சேர்ந்துதான் பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து இருப்பதாகவும், போலீசார் பாரபட்சம் காட்டாமல் அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

குழந்தை உயிரிழப்பு

இந்தநிலையில் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தது. இதனையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

29ம் தேதி வரை சிறை

கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிபின் மஞ்சு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

போக்சோ, கொலை உள்ளிட்ட 4க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரைமணி நேரத்திற்கு மேல் நடந்த விசாரணைக்கு பிறகு, பிபின் மஞ்சுவை வரும் 29ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உமா மகேஸ்வரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொய்யான தகவலை பரப்பவேண்டாம் - போலீசார் வேண்டுகோள்

கும்மிடிப்பூண்டி குழந்தை கொலை சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:-

குழந்தை பாலியல் வன்கொடுமை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவரும், பாதிக்கப்பட்ட குழந்தையும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இது குறித்து கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக சரிபார்க்கப்படாத தகவல்கள் மற்றும் பொய்யான தகவல்களை பரப்புவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com