

புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவனை, 17 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே கருக்காக்குறிச்சி திருமுருகபட்டினத்தை சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியின் 9 வயது மகன், அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை அப்பகுதி சிறுவர்களுடன் விளையாடிய மாணவன் இரவாகியும் வீட்டுக்கு வரவில்லை.
இதையடுத்து மாணவனின் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது, தண்ணீர் இல்லாத குளத்தில் சிறுவன் கழுத்து மற்றும் முகத்தில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதையறிந்த வடகாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது மாணவன் காணாமல் போவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு 17 வயது சிறுவன் ஒருவன் மாணவனை அழைத்துச் சென்றதாக தெரிய வந்தது. இதையடுத்து அந்த 17 வயது சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அந்த சிறுவன், உயிரிழந்த மாணவனிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாகவும், அதற்கு சிறுவன் எதிர்ப்பு தெரிவித்ததால் துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் ஒப்புக் கொண்டான். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.