கடனுதவி பெற சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் கடனுதவி பெற சிறுபான்மை சமூகத்தினர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
கடனுதவி பெற சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம்
Published on

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அதிகபட்ச கடன்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்குள், கிராமப்புறம் ரூ.98 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். தனிநபர் கடன் ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிக பட்ச கடனாக ரூ.20 லட்சம் வழங்கப்படும்.

அதேபோல் டாம்கோ திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டியில் அதிக பட்ச கடனாக ரூ.30 லட்சம் வரையிலும், கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிக பட்ச கடனாக ரூ.10 லட்சம் வரையிலும், சுயஉதவி குழு கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ஆண்டிற்கு 7 சதவீத வட்டியிலும் கடன் வழங்கப்படுகிறது.

மாணவ-மாணவிகளுக்கு

மேலும் சிறுபான்மை மாணவ- மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி படிப்பவர்களுக்கு அதிகப்பட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20 லட்சம் வரையில் 3 சதவீதம் வட்டி, திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீதம் வட்டியில் ரூ.30 லட்சம் வரை கல்வி கடன் வழங்கப்படுகிறது.

எனவே மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், கள்ளக்குறிச்சி அல்லது கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்துக்கான சான்று, ஆதார் அட்டை, வருமானசான்று, குடும்ப அட்டை அல்லது இருப்பிட சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மை சான்றிதழ் கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது, செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com