

சென்னை,
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் புதுவையில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புதுவையில் தங்கியுள்ள எம்.எல்.ஏக்களை எடப்பாடி பழனிசாமி சற்று நேரத்தில் சந்தித்து பேச உள்ளார். இதற்கிடையே, புதுவை மாநில அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “தமிழ்நாடு அரசியலில் அதிசயம் நிகழும். 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் ஆளுநரை எடப்பாடி பழனிசாமி சந்திப்பார். சென்னை அரசியலில் வெயில் அதிகம்; அதனால் புதுவை வந்துள்ளனர்.
தமிழக ஆளுநர் எடுத்த முடிவு சரியான நடவடிக்கை. 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்க வேண்டும். விஜய் தனக்கு மெஜாரிட்டி இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். 108 தானே இருக்கிறது என்று கவர்னர் கேட்டு இருக்கிறார். நான் எப்படி உங்களை மெஜாரிட்டி இருக்கிறது என்று அழைக்க முடியும் என கேட்கிறார். காங்கிரஸ் சேர்ந்தாலும் 113 தானே வருகிறது.
118 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள் என்று திருப்திப்பட வேண்டும். கவர்னர் திருப்திப்பட்டால்தான் அழைப்பு விடுக்க முடியும். கவர்னர் எடுத்த முடிவு சரியான நடவடிக்கை. சரியான பாதையில் கவர்னர் செல்கிறார். யாராக இருந்தாலும் அதே நிலைப்பாடுதான். 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இல்லாமல் எடப்பாடி பழனிசாமி அங்கு போக மாட்டார்” என்றார்.