உருவக்கேலியால் விபரீதம்: கோவில்பட்டியில் சுமை தூக்கும் தொழிலாளி கோடரியால் வெட்டிக்கொலை

கோவில்பட்டி மார்க்கெட்டில் இரண்டு சுமை தூக்கும் தொழிலாளிகள் ஒருவரை ஒருவர் மாறி மாறி உருவக்கேலி செய்து வந்ததால், அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
கொலையான காளிராஜ், கைதான சின்னத்துரை.
Published on: 

கோவில்பட்டி,

கோவில்பட்டி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளி கோடரியால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். உருவக்கேலி செய்ததால் சக தொழிலாளியே இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார்.

சுமை தூக்கும் தொழிலாளர்கள்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த மாயாண்டி மகன் காளிராஜ் (வயது 40). கோவில்பட்டி அருகே அஞ்சுராமன்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துகருப்பன் மகன் சின்னத்துரை(40). இவர்கள் 2 பேரும் கோவில்பட்டி திட்டங்குளம் காய்கறி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்களாக வேலை செய்தனர். இவர்கள் இருவரும் மார்க்கெட்டில் வேலைக்கு சென்றபோது, ஒருவரை ஒருவர் மாறி மாறி உருவக்கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.

கடையில் தூங்கியபோது...

கடந்த 25-ந்தேதி இரவு மார்க்கெட்டில் உருவக்கேலி செய்தது தொடர்பாக, அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த காளிராஜ் சின்னத்துரையை தாக்கியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வழக்கம்போல் மார்க்கெட்டுக்கு வேலைக்கு சென்ற காளிராஜ் இரவில் வேலை முடிந்ததும், அதிகாலையில் வரும் லாரிகளில் இருந்து மூட்டைகளை இறக்குவதற்காக அங்குள்ள கடையில் படுத்து தூங்கினார்.

கோடரியால் வெட்டிக்கொலை

நள்ளிரவில் சின்னத்துரை மதுபோதையில் மார்க்கெட்டுக்கு கோடரியுடன் வந்தார். அவர், கடையில் தூங்கி கொண்டிருந்த காளிராஜை கோடரியால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் கழுத்தில் பலத்த வெட்டுக் காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பின்னர் சின்னத்துரை கோடரியுடன் கொப்பம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நீல் சர்மா மற்றும் கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இறந்த காளிராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சக தொழிலாளி கைது

கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னத்துரையை கைது செய்தனர். இறந்த காளிராஜிக்கு கனகவல்லி என்ற மனைவியும், 2 வயதில் ஆண் குழந்தையும், பிறந்து 2 மாதங்களே ஆன இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளனர். கோவில்பட்டி மார்க்கெட்டில் உருவக்கேலி செய்ததால் சுமை தூக்கும் தொழிலாளியை சக தொழிலாளியே கோடரியால் வெட்டிக்கொலை செய்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com