திருவள்ளூர் பஸ் நிலையத்தில் அரசு பஸ் டிரைவர் மீது மர்மநபர்கள் தாக்குதல் - ஊழியர்கள் போராட்டத்தால் போக்குவரத்து சேவை பாதிப்பு

திருவள்ளூரில் அரசு பஸ் டிரைவர் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியதால் ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
திருவள்ளூர் பஸ் நிலையத்தில் அரசு பஸ் டிரைவர் மீது மர்மநபர்கள் தாக்குதல் - ஊழியர்கள் போராட்டத்தால் போக்குவரத்து சேவை பாதிப்பு
Published on

திருவள்ளூர் நகரின் மையப் பகுதியான வீரராகவர் திருக்கோயில் அமைந்துள்ள தேரடியில் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் ஒன்று கூடி எந்தெந்த பகுதிக்கு யார் யார் செல்ல வேண்டும் என்று தீர்மானிப்பார்கள். போக்குவரத்து நெரிசலான பகுதியில் சாலையோரத்தில் நின்று பிரித்து அனுப்புவது வழக்கம். அப்போது அங்கு நேற்று செங்குன்றம் பகுதியில் இருந்து திருவள்ளூருக்கு தடம் எண்-55 என்ற அரசு பஸ் வந்துக்கொண்டிருந்தது.

தேரடி அருகே வந்த போது சாலையோரத்தில் தொழிலாளர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்ததால் பஸ் திரும்ப வழி இல்லாமல் சிறிது நேரம் நின்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அரசுபஸ்டிரைவர் கட்டிட தொழிலாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது கைகலப்பாகி கட்டுமானத் தொழிலாளர் ஒருவரை அரசுப் பேருந்து டிரைவரை தாக்கிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அங்கு வந்த மர்ம நபர்கள் பஸ் நிலையத்துக்குள் நின்ற அரசு பஸ் டிரைவரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பஸ் நிலையத்தில் இருந்த அனைத்து அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் பஸ்களை இயக்க மறுத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டிரைவரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் தனியார் பஸ்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்தனர்.

தகவல் அறிந்து திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டத்தால் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பேருந்துகள் சேவை சுமார் ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com