

ஈரோடு,
ஈரோட்டில் காணாமல் போன பூனையை கண்டுபிடித்து தருபவருக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் வழங்குவதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜான் லாசர். இவருடைய மகள் ஆருத்ரா. இவர் கர்நாடகா மாநிலம் பெங்களுரூவில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். ஆருத்ரா செர்பியன் இன பூனை ஒன்றை வளர்த்துள்ளார். அந்த பூனையின் பெயர் ரோச்.
சமீபத்தில் ஆருத்ரா ஈரோடு வந்துள்ளார். அப்போது அவருடைய செல்லபிராணி பூனையையும் உடன் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் இருந்த பூனை திடீரென காணாமல் போனது. இதைத்தொடர்ந்து பூனையை பல்வேறு பகுதிகளில் தேடிப் பார்த்தனர். ஆனால் பூனை கிடைக்கவில்லை. இதனால் ஆருத்ரா மனமுடைந்தார்.
இதையடுத்து ஜான் லாசர் சமூக வலைதளங்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'உரிமையாளர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் தனது அன்பான பூனைக்காக ஏங்கி கொண்டிருக்கிறார். எனவே தயவுசெய்து பூனையை கண்டுபிடிக்க உதவுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பூனையை கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.