செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு: 2வது நாளாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை

சிறுமி மாயமான வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்ட மறுநாளே அவர்கள், அதிரடியாக விசாரணையை தொடங்கினர்.
செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு: 2வது நாளாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை
Published on: 

விழுப்புரம்,

செஞ்சி அருகே சிறுமி மாயமான சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை தொடங்கியது. இவ்வழக்கின் ஆவணங்களை சத்தியமங்கலம் போலீசார், சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சிறுமி மாயம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி குளக்கரை தெருவில் வசித்து வருபவர் வடிவேலு- பவானி தம்பதியினரின் 2-வது மகள் ஹேமாவதி (வயது 7). இவள், கடந்த 11-ந் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடிவிட்டு அன்று இரவு வீட்டில் பெற்றோருடன் படுத்து தூங்கியுள்ளாள். மறுநாள் அதிகாலை 5 மணியளவில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது ஹேமாவதியை திடீரென காணவில்லை. அவளை பல்வேறு இடங்களில் பெற்றோர், உறவினர்கள் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

துப்பும் துலங்கவில்லை

சிறுமியை கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட 10 தனிப்படையினர், பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தியதுடன் சிறுமியை உயிருடன் மீட்க பல இடங்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். 10 நாட்களாக தேடியும் சிறுமியை பற்றிய எந்தவொரு துப்பும் துலங்கவில்லை. சிறுமியின் கதி என்னவாயிற்று? என்று தெரியாமல் பெற்றோர், உறவினர்கள் மட்டுமின்றி அந்த கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றம் செய்து நேற்று முன்தினம் இரவு தமிழக போலீஸ் டி.ஜி.பி. டாக்டர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.

உடனடியாக இவ்வழக்கின் விசாரணை அதிகாரிகளாக சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், துணை போலீஸ் சூப்பிரண்டு கீதா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் நேற்று காலை விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்திற்கு வந்தனர்.

அவர்கள், சிறுமி மாயமான சம்பவம் தொடர்பாகவும், இதுவரை உள்ளூர் போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் விவரம் குறித்தும் போலீசாரிடம் கேட்டறிந்து ஆலோசனை நடத்தினர். சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக இந்த ஆலோசனை நடந்தது.

விசாரணையை தொடக்கம்

அதன் பிறகு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், துணை போலீஸ் சூப்பிரண்டு கீதா, இன்ஸ்பெக்டர்கள் ரேவதி. பாலமுருகன் உள்ளிட்ட 6 பேர் அடங்கிய போலீசார், விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 1 மணியளவில் ஆலம்பூண்டியில் உள்ள சிறுமியின் வீட்டுக்கு சென்றனர்.

அங்கு கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டு சிறுமியின் தாயார் பவானியிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து, சிறுமி ஹேமாவதிக்கு கடந்த 11-ந் தேதி மாலையில் எந்த நேரத்தில் பிறந்த நாள் விழாவை ஆரம்பித்து எப்போது முடித்தீர்கள், சிறுமியை வாழ்த்த அக்கம், பக்கத்தினர் யாரெல்லாம் வந்தனர், உறவினர்கள் யார், யார் வந்தார்கள், அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்.

அன்று இரவு எத்தனை மணிக்கு ஹேமாவதி தூங்கினாள், சிறுமியின் அருகில் யார், யார் படுத்து தூங்கினர். எத்தனை மணிக்கு நீங்கள் எழுந்து பார்த்தீர்கள். சிறுமி வீட்டில் இல்லாததை முதலில் யாரிடம் கூறினீர்கள், சத்தியமங்கலம் போலீசாருக்கு எப்போது புகார் செய்தீர்கள் என்று பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டு விசாரணை நடத்தினர். அதற்கு பவானி அளித்த பதில்களை போலீசார் பதிவு செய்துகொண்டனர்.

சிறுமி அழும் சத்தம்

பின்னர் சம்பவத்தன்று போலீஸ் மோப்ப நாய் ஏஸ், மோப்பம் பிடித்தபடி சென்ற பாதையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பார்வையிட்டு விசாரித்தனர். அதுபோல் வீட்டின் மாடிக்கு சென்ற போலீசார், அங்கிருந்து சிறுமியின் வீட்டை சுற்றியுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் சம்பவத்தன்று அதிகாலை 3 மணியளவில் சிறுமி அழும் சத்தம் கேட்டதாக எதிர்வீட்டில் வசித்து வரும் மஞ்சுளா ஏற்கனவே சத்தியமங்கலம் போலீசாரிடம் கூறியிருந்த நிலையில் அவரது வீட்டுக்கும் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த விசாரணை நடந்தது. அதன் பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் அங்கிருந்து விழுப்புரம் புறப்பட்டுச் சென்றனர்.

2வது நாளாக விசாரணை

இதனிடையே இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார், சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அங்கு அவர்களிடம், சிறுமி மாயமான சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை, இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆவணங்களை சத்தியமங்கலம் போலீசார் ஒப்படைத்தனர். இதன் அடிப்படையில் சிறுமி மாயமான சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி மாயமான வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்ட மறுநாளே அவர்கள், அதிரடியாக விசாரணையை தொடங்கினர்.

இந்நிலையில் செஞ்சியில் சிறுமி காணாமல் போன சிறுமியின் பெற்றோரிடம் 2வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி சிறுமியின் வீடு அமைந்துள்ள பகுதியை வரைபடமாக்கி சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் தாய், தந்தை, உறவினர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சிசிடிவி பதிவு, செல்போன் டவர் தரவுகளை சி.பி.சி.ஐ.டி. ஆய்வு செய்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com