

விழுப்புரம்,
சிறுமி மாயமான அதே நள்ளிரவில், அவரது வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் மர்ம நபர்கள் நடமாடியதாக தெரிய வந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு-பவானி தம்பதியினரின் 7 வயது மகள் ஹேமலதா என்ற ஹேமாவதி. இவள், கடந்த 11-ந்தேதி மாலையில் தனது பிறந்தநாளை கொண்டாடி முடித்து விட்டு பெற்றோருடன் படுத்து தூங்கினாள். மறுநாள் அதிகாலையில் அவளை திடீரென காணவில்லை.
சிறுமியை கண்டுபிடிக்க மாவட்ட காவல்துறை சார்பில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டுகள் வேல்முருகன், கீதா ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறுமி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 6 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையில் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதனைத்தொடர்ந்து அவர்கள் 7-வது நாளான நேற்று 2-ம் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். சி.பி.சி.ஐ.டி. போலீசார், 4 குழுக்களாக பிரிந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வழக்கு நாளுக்கு நாள் பெரும் மர்ம கதையாக நீடித்துக்கொண்டிருக்கிறது. சிறுமி காணாமல் போனதாக கூறப்படும் 11-ந்தேதி இரவு அவள் தனியாக வேறு அறையில் தூங்கவில்லை. பெற்றோர் வடிவேலு, பவானி மற்றும் சிறுமியின் பாட்டி ஆகிய 3 பேருடன் ஒரே அறையில்தான் படுத்து தூங்கியுள்ளாள். நள்ளிரவில் சிறுமி மட்டும் எப்படி தனியாக எழுந்து வெளியே சென்றாள்? யாருக்கும் எந்தவித சத்தமும் கேட்கவில்லையா? அல்லது யாராவது கதவை திறந்து உள்ளே வந்து சிறுமியை கடத்திச் சென்றனரா? என்ற பல்வேறு கோணங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சிறுமி மாயமாகி 18 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புதிய தகவல் கிடைத்துள்ளது. சிறுமி மாயமான அதே நள்ளிரவில், அவரது வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள மணிமேகலை என்ற மூதாட்டியின் வீட்டின் கதவை மர்ம நபர்கள் தட்டியதாக தெரிய வந்துள்ளது. தனியாக இருந்ததால், பயத்தில் மூதாட்டி கதவைத் திறக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தகவல் கிடைத்ததும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மூதாட்டியின் வீட்டுக்குச் சென்று, கதவு தட்டப்பட்ட நேரம் மற்றும் சந்தேகத்திற்கிடமான ஆட்களின் நடமாட்டம் குறித்து விரிவான வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர். கொள்ளையடிக்க அல்லது குழந்தையை கடத்த வந்த கும்பல் வீடு மாறி மூதாட்டியின் கதவைத் தட்டியதா? ஊருக்குள் சுற்றிய மர்ம நபர்கள் யார்? என்ற பல்வேறு கோணங்களில் தற்போது விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
மூதாட்டியின் வீட்டைச் சுற்றியுள்ள பாதைகள் மற்றும் முட்புதர்களை மீண்டும் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு இந்த வாக்குமூலம் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முக்கியமான தடயமாக மாறியுள்ளது.