வண்டலூர் உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கத்தின் இருப்பிடம் கண்டுபிடிப்பு - அதிகாரிகள் தகவல்


வண்டலூர் உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கத்தின் இருப்பிடம் கண்டுபிடிப்பு - அதிகாரிகள் தகவல்
x

மாயமான சிங்கம் ‘லயான் சபாரி’ பகுதிக்குள்தான் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு,

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 147 ஏக்கர் பரப்பளவில் 'லயன் சபாரி' என்று அழைக்கப்படும் அடர்ந்த காட்டுப் பகுதி உள்ளது. அங்கு பார்வையாளர்கள் பாதுகாப்பு வசதிகள் கொண்ட வாகனங்களில் சென்று சிங்கங்களை அருகில் சென்று பார்த்து ரசிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு புதிதாக கொண்டு வரப்பட்ட ஆண் சிங்கம், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ‘லயன் சபாரி’ காட்டுப்பகுதியில் விடப்பட்டது. இந்த சிங்கம் தேசிய விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், குஜராத் மாநிலம், ஜூனாகட் நகரில் உள்ள சக்கார்பாக் விலங்கியல் பூங்காவில் இருந்து வண்டலுார் பூங்காவிற்கு அனுப்பப்பட்டது.

பொதுவாக, ‘லயன் சபாரி’ காட்டுப்பகுதியில் விடப்படும் சிங்கங்கள், மாலை நேரம் ஆனதும் தங்களுக்கான கூண்டிற்கு தானாக திரும்பி வந்துவிடும். ஆனால், புதிதாக விடப்பட்ட ஆண் சிங்கம், மாலை ஆகியும் கூண்டிற்கு திரும்பவில்லை. அந்த சிங்கம் காட்டுப் பகுதிக்குள் எங்கு சென்றது என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து, சிங்கம் மாயமானது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ‘லயன் சபாரி’ பகுதியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்பு வேலிகள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டன. சிங்கம் எங்கு சென்றது என்பது தெரியாததால் வண்டலூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 2 நாட்களாக மாயமான சிங்கத்தை தேடி வந்த நிலையில், தற்போது அதன் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மாயமான சிங்கம் ‘லயான் சபாரி’ பகுதிக்குள்தான் இருப்பதாகவும், வெளியே எங்கும் செல்லவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிங்கத்தின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டதால் வண்டலூர் பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

1 More update

Next Story