திருச்சியில் காணாமல் போன இளம்பெண் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுப்பு - போலீஸ் விசாரணை

சடலமாக கிடந்தது காணாமல் போன இளம்பெண் மீரா ஜாஸ்மின் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
திருச்சி,
திருச்சி மாவட்டம் சீனிவாச நகர் பகுதியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண் மீரா ஜாஸ்மின். கடந்த ஏப்ரல் மாதம் தனது கல்லூரி படிப்பை முடித்த மீரா ஜாஸ்மின், வேலை தேடி விண்ணப்பித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வேலை விஷயமாக நேர்முகத் தேர்வுக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு மீரா ஜாஸ்மின் வீட்டில் இருந்து கிளம்பிச் சென்றுள்ளார்.
ஆனால் இரவு வரை மீரா ஜாஸ்மின் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், மீரா ஜாஸ்மினின் செல்போன் டவரை வைத்து அவரது இருப்பிடத்தை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது எம்.ஆர்.பாளையம் அருகே உள்ள காப்பு காடு பகுதியில் இருந்து சிக்னல் கிடைத்துள்ளது.
இதையடுத்து போலீசார் அந்த பகுதிக்குச் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அந்த காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் கிடந்த ஒரு பெண்ணின் சடலத்தை போலீசார் கண்டெடுத்தனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், எரிந்த நிலையில் சடலமாக கிடந்தது காணாமல் போன இளம்பெண் மீரா ஜாஸ்மின் என்பது உறுதி செய்யப்பட்டது.
அவரை யாரோ கொலை செய்து, உடலை அங்கு எடுத்து வந்து எரித்துள்ளனர் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மீரா ஜாஸ்மினின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






