எம்.ஐ.டி. கல்லூரியில் இதுவரை 81 பேருக்கு கொரோனா பாதிப்பு - அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

எம்.ஐ.டி. கல்லூரியில் இதுவரை 81 பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
எம்.ஐ.டி. கல்லூரியில் இதுவரை 81 பேருக்கு கொரோனா பாதிப்பு - அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்
Published on

தாம்பரம்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் அண்ணா பல்கழைக்கழக எம்.ஐ.டி. கல்லூரி வளாகம் உள்ளது. இங்கு வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். விடுதியில் தங்கி இருந்த 1,650 மாணவர்களில் சிலருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் விடுதியில் தங்கி இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி கடந்த 30-ந்தேதியிலிருந்து 1,617 மாணவர்களுக்கு தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முதல் கட்டமாக அதில் 67 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதில் 48 பேர் மாணவர்கள், 19 பேர் மாணவிகள் ஆவர்.

இவர்களில் 53 பேர் கல்லூரியில் உள்ள அந்தந்த விடுதி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்து தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அனுப்பி வைக்கப்பட்டனர். பாதிப்பு இல்லாதவர்களும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தாம்பரம் மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் விடுதியில் தங்கியுள்ள மற்ற மாணவ-மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இன்னும் பலருக்கு கொரோனா பரிசோதனை முடிவு வரவேண்டியது உள்ளது. அதில் மேலும் பலருக்கு தொற்று உறுதியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் எம்.ஐ.டி. கல்லூரியில் இதுவரை 81 பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமைச்சர் பொன்முடி மற்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோர் எம்.ஐ.டி கல்லூரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்தனர். இதனைத்தொடர்ந்து நிருபர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், எம்.ஐ.டி. கல்லூரியில் இதுவரை 81 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3 பேர், 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், தடுப்பூசி போடாதவர்கள். மேலும் 262 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com