குடிநீரில், பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்

திருவிழந்தூர் அம்பேத்கர் நகரில் குடிநீரில், பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என நகரசபை கூட்டத்தில் உறுப்பினர் வலியுறுத்தினார்.
குடிநீரில், பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்
Published on

திருவிழந்தூர் அம்பேத்கர் நகரில் குடிநீரில், பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என நகரசபை கூட்டத்தில் உறுப்பினர் வலியுறுத்தினார்.

நகரசபை கூட்டம்

மயிலாடுதுறை நகரசபை கூட்டம் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் உறுப்பினர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-

ஜெயந்தி (அ.தி.மு.க.):- திருவிழந்தூர் பகுதி, குறைநாடு திருமஞ்சன வீதி பகுதியை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே இருந்த நடைபாலம் சேதமடைந்து பல ஆண்டுகள் ஆகிறது. அதனை சீரமைக்க கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

கணேசன் (ம.தி.மு.க.):- நகராட்சி மின் மயானத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக அளவில் பணம் வசூலிக்கின்றனர். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதாள சாக்கடை கழிவுநீர்

கல்யாணிரகு (தி.மு.க.):- திருவிழந்தூர் அம்பேத்கர் நகரில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி குடிநீரில் கலக்கிறது. இது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரிஷிகுமார் (தி.மு.க.):- பரிமள ரங்கநாதர்கோவில் தெற்குவீதி-தீப்பாய்ந்தாள்அம்மன் கோவில் செல்லும் வகையில் புதிய சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையை பயன்படுத்த முடியாத அளவிற்கு நகராட்சி தூய்மை பணியாளர்களே குப்பைகளை கொண்டுவந்து கொட்டுவதால் சாலை மூடப்பட்டுள்ளது. அதனை சரிசெய்து சாலையை பயன்பாட்டிற்கு விட வேண்டும்.

சதீஷ்குமார் (அ.தி.மு.க.):-பூக்கொல்லை பகுதியில் பொதுகுடிநீர் குழாய் அமைத்துகொடுக்க வேண்டும்.

சர்வோதயன் (தி.மு.க.):- ஸ்டேட் பாங்க் சாலையில் பாதாளசாக்கடை கழிவுநீர் வழிந்தோடுவதை சரிசெய்ய வேண்டும்.

பேட்டரி பழுது

கீதா(தி.மு.க.):- குப்பைவண்டிகளின் பேட்டரி பழுதடைந்துள்ளதால் தள்ளுவண்டியில் வந்து தூய்மை பணியாளர்கள் குப்பைகளை எடுக்க சிரமப்படுகின்றனர். எனவே பேட்டரி வண்டியை சரிசெய்து கொடுக்க வேண்டும்.

ராமச்சந்திரன் (அ.தி.மு.க.):- பழுதடைந்த மினிபவர் டேங் மோட்டார்களை சீரமைக்க வேண்டும்.

உஷாராணி (தி.மு.க.):- பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது.அதை கட்டுப்படுத்த வேண்டும்.

செந்தில் (பா.ம.க.):- நகராட்சி பகுதியில் வணிக நிறுவனங்களில் பெயர்பலகையை தமிழில் வைக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

ஆனந்தி (அ.தி.மு.க.):- பாதாளசாக்கடை கழிவுநீர் சாலையில் பல இடங்களில் வழிந்தோடுகிறது. புளியந்தெருவில் பல இடங்களில் சாலை அடிக்கடி உள்வாங்குவதை சரிசெய்ய வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது

கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் சனல்குமார் மற்றும் நகராட்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். நகராட்சி துணைத்தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com