தி.மு.க. மறுசீரமைப்பு ஆலோசனை குழு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அக்குழுக்களுக்கான பணிகளின் மறுவரையறை உள்ளிட்டவை குறித்தும் பரிந்துரைகளை ஆகஸ்ட் முதல் வாரத்தில் என்னிடம் வழங்கிடும்.
மு.க.ஸ்டாலின்
Published on
Updated on

சென்னை,

தி.மு.க. மறுசீரமைப்பு ஆலோசனை குழு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. இது தொடர்பாக தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

காவல் அரண்

தமிழ்நாட்டின் வளத்துக்கும் நலத்துக்கும் 75 ஆண்டுகளை கடந்தும் உழைத்து வரும் பேரியக்கம் திராவிட முன்னேற்ற கழகம். ஆறு முறை தமிழ்நாட்டை ஆண்டது கழகம். இன்றைய நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது கழகம். எதிர்க்கட்சியாக இருக்கும்போது தமிழ்நாட்டை காக்கும் காவல் அரணாக இருப்பதும் கழகம் தான்.

எஃகு கோட்டை

இத்தகைய அரசியல் வரலாற்றில், தேர்தல் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தபோதும், கழகம் என்றைக்கும் வலுமிக்க எஃகு கோட்டையாகவே கம்பீரமாக நிற்கிறது. அதற்கு காரணம் கழகத்தின் கோடிக்கணக்கான உடன்பிறப்புகளும், கழகத்தின் அமைப்பு முறையும் ஆகும்.

அறிக்கை

இந்த இரண்டும், நாளுக்கு நாள் வலிமை பெற்று வரும் சூழலை கழகம் உருவாக்கி வைத்துள்ளது. காலந்தோறும் தன்னை புதுப்பித்து கொண்டே வந்துள்ளது கழகம். கொள்கையை அடிப்படையாக வைத்து, அமைப்பு முறையிலும் கட்டமைப்பிலும் புதுமைகளை செய்ய நாம் தவறியதில்லை. அதேபோன்ற மறுசீரமைப்பை மீண்டும் தொடங்க இருக்கிறோம் என நான் அறிவித்தேன். அதற்கான அறிவிப்பை, இந்த அறிக்கை மூலமாக தெரிவிக்க விரும்புகிறேன்.

ஆய்வுக்குழு

கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியான உடனேயே கழக உடன்பிறப்புகளின் கருத்துகளை கேட்க வேண்டும் என நான் முடிவெடுத்தேன். இதற்கான குழுக்களை அமைத்தேன். ஒவ்வொரு தொகுதியாக சென்று நிர்வாகிகளையும் தொண்டர்களையும் நேரடியாக சந்தித்து எனது கண்களும் காதுகளுமாக இருந்து அவர்தம் கருத்துகளை பெற்று வருமாறு 19 குழுக்களை அமைத்து, ஒவ்வொரு குழுவுக்கும் தலா இருவர் என 38 பேரை ஆய்வுக்குழுவினராக அனுப்பி வைத்திருந்தேன்.

குறிப்பெடுத்து வருகிறேன்

தமிழ்நாடு முழுவதும் இவர்கள் சென்றார்கள். எனது எதிர்பார்ப்பு எள் முனையளவும் சிதையாமல் 38 பேரும் இரவு பகல் பாராது கழகத்தினரை சந்தித்து - ஆய்ந்து அறிக்கைகளை தயாரித்து என்னை நேரடியாக சந்தித்து கொடுத்துள்ளார்கள். அறிக்கையை வழங்கும்போது ஒவ்வொருவரும் தனித்தனியாக என்னிடம் கலந்துரையாடினர். அவர்களின் கருத்துகளையெல்லாம் கேட்டறிந்து, அவர்கள் வழங்கிய அறிக்கையை ஒவ்வொரு நாளும் நானே படித்து குறிப்பெடுத்து வருகிறேன்.

தலைவணங்குகிறேன்

கழகத்தின் மீதும், கழக தலைமை மீதும் நிர்வாகிகளும் தொண்டர்களும் வைத்துள்ள ஆழமான பற்றுக்கும் - உண்மையான நம்பிக்கைக்கும் நான் தலைவணங்குகிறேன். இத்தகைய உடன்பிறப்புகளுக்கு தலைமை வகிக்கும் தகுதியை நான் பெற்றுள்ளேன் என்பதை நினைத்தும் பெருமைப்படுகிறேன்.

உடன்பிறப்பின் குரல்

கள ஆய்வுக்குழுவினர் ஒவ்வொரு தொகுதியாக சென்று, கழகத்தினர் மற்றும் நிர்வாகிகளை சந்தித்தாலும், நிர்வாகிகள் அல்லாத கழக ஆதரவாளர்களும், இணையத்தில் களமாடும் களவீரர்களும் தங்கள் கருத்துகளை பகிர வாய்ப்பிருக்குமா எனவும் ஒரு கேள்வி எழுந்தது. அதன் விளைவுதான் ஆன்லைன் வழியாக கருத்துகளை பெற, ‘உடன்பிறப்பின் குரல்’ என்ற இணையதளத்தை உருவாக்க சொல்லியிருந்தேன். அதில் கிட்டத்தட்ட ஆறு லட்சம் கருத்துகள் பெறப்பட்டுள்ளன. அவற்றை மனித தலையீடின்றி ஏ.ஐ தொழில்நுட்பம் வழியாக அறிக்கையாக தயாரித்து வழங்கியுள்ளனர். அவற்றையும் படித்து பார்த்து தனிப்பட்ட முறையில் குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன்.

மறுசீரமைப்பு

இவர்கள் அனைவரின் ஒட்டுமொத்த கருத்து என்பது கழகத்தின் மறுசீரமைப்பு ஆகும். காலத்திற்கேற்ற மறுசீரமைப்புகளைத்தான் பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்திக் கூறியுள்ளனர். அதனடிப்படையில் மறுசீரமைப்பு குறித்தும், கழகத்தின் மறுகட்டுமானம் குறித்தும் எனக்கு சில கருத்துகள் இருக்கின்றன. கழகத்திற்குப் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் கிளைக் கழகங்கள் தொடங்கி தலைமைக் கழகம் வரை செய்யப்பட வேண்டிய மறுசீரமைப்புக்கு இது சரியான தருணம் என நான் நினைக்கிறேன். நம்முடைய கடந்தகால குறைகளைக் களைந்து, மக்களிடம் புதிய வடிவில் செல்வதற்கும் மறுசீரமைப்பும் - மறுகட்டுமானமும் மிக அவசியம் என்பதை நாம் உணர்ந்து, அதற்குத் தயாராகிட வேண்டும்.

இதுவரை கழகத்தினர் மூலம் எனக்கு கிடைக்கப்பெற்றுள்ள கருத்துகளையும், ஆலோசனைகளையும் பரிசீலித்து கழகத்தின் கட்டமைப்பில் கிளைக் கழகம் முதல் தலைமை கழகம் வரையில் ஒரே சீரான மாற்றங்களை பரிந்துரைத்திட கீழ்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது.

திரு. தங்கம் தென்னரசு

திருமதி. கீதா ஜீவன்

திரு. அர. சக்கரபாணி

திரு. எஸ்.எஸ்.சிவசங்கர்

திருமதி. தமிழரசி இரவிக்குமார்

திரு. எம்.எம்.அப்துல்லா

திரு. இ. பரந்தாமன்

திரு. ச. முரசொலி, எம்.பி.,

டாக்டர். எழிலன்

திரு. எஸ்.கே.பி. கருணா

ஆகியோர் இதில் இடம் பெறுவர்.

மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும்

இக்குழுவானது, கழக மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய மறுவரையறை, கழகத்தின் சார்பு அணிகளின் மறுசீரமைப்பு, தேர்தல் பணிக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புகள், தேர்தல் பணிகளை செய்வதற்கான நிரந்தர அமைப்பு, தலைமைக்கான பரிந்துரைகளை மேற்கொள்ளும் (Think tank) போன்றதொரு அமைப்புக்கான தேவை, அக்குழுக்களுக்கான பணிகளின் மறுவரையறை உள்ளிட்டவை குறித்தும் பரிந்துரைகளை ஆகஸ்ட் முதல் வாரத்தில் என்னிடம் வழங்கிடும்.

அடுத்த நூறாண்டுகளுக்குக் கழகத்தை வழிநடத்திடும் வகையிலான இப்பரிந்துரைகள், கழக உயர்நிலை செயல்திட்ட குழு மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் ஆகியோருடன் முழுமையாக விவாதிக்கப்பட்டு கழகத்தில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com