மு.க.ஸ்டாலின் - டி.டி.வி.தினகரன் இடையே ரகசிய உறவு உள்ளது தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

மு.க.ஸ்டாலின் - டி.டி.வி.தினகரன் இடையே ரகசிய உறவு உள்ளது என தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மு.க.ஸ்டாலின் - டி.டி.வி.தினகரன் இடையே ரகசிய உறவு உள்ளது தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
Published on

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து நாகமலை புதுக்கோட்டை, வடபழஞ்சி, தனக்கன்குளம் ஆகிய இடங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

அ.தி.மு.க. மக்கள் இயக்கம். மக்களுக்காக பாடுபடுகிற இயக்கம். ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால், இந்த தொகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றித்தர அவர் பாடுபடுவார். எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அவர்கள் அரசிடம் அணுகி தேவையான உதவிகளை பெற்றுத்தருவார்களா? என்றால் இல்லை.

இதுவரை எந்த தி.மு.க. எம்.எல்.ஏ.வாவது என்னை சந்தித்து தொகுதி பிரச்சினை குறித்து ஏதாவது கோரிக்கை வைத்தார்களா? இல்லவே இல்லை. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த தொகுதியில் வெற்றி பெற்றால் இந்த திட்டத்தை கொண்டுவருவேன், அந்த திட்டத்தை செயல்படுத்துவேன் என வாக்குறுதி அளிக்கிறார். இவர் எதிர்க்கட்சி தலைவராகத்தான் இருக்கிறார். இவரால் எப்படி வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்? என்று சிந்தித்து பார்க்கவேண்டும்.

ஏற்கனவே நடைபெற்ற 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், தற்போது நடைபெற உள்ள 4 தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றிலும் அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்று அதிக பெரும்பான்மையுடன் தொடர்ந்து நல்லாட்சி நடைபெறும். நான் சாதாரண தொண்டனாக வந்து உங்களிடம் வாக்குகளை கேட்கிறேன். தலைவராக வரவில்லை. ஆனால் மு.க.ஸ்டாலின் தலைவராக வந்து வாக்கு கேட்கிறார். மக்களாகிய நீங்கள் இடுகின்ற கட்டளையை நிறைவேற்றித்தருவதை எனது கடமையாக கருதி நான் பணியாற்றி வருகிறேன்.

கேபிள் டி.வி. கட்டணத்தை குறைப்பதாக மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். கருணாநிதி மற்றும் தயாநிதி மாறன் குடும்பத்துக்கு மட்டும் 40 டி.வி. சேனல்கள் உள்ளது. இதில் சன் டி.வி குழுமத்தில் உள்ள சேனல்களை பார்க்க ரூ.56 கட்டணம் ஆகிறது. கேபிள் டி.வி. கட்டணத்தை குறைப்பதாக சொல்லும் மு.க.ஸ்டாலின், இந்த சேனல்களின் கட்டணத்தை தள்ளுபடி செய்யலாமே. ஆனால் இதுபற்றி அவர் வாய்திறக்க மாட்டார். எனினும் தேர்தல் முடிந்த பிறகு கேபிள் டி.வி. கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும் என பேசி வருகிறார்கள். இது எடப்பாடி ஆட்சி அல்ல. ஜெயலலிதாவின் ஆட்சி. ஜெயலலிதா சூறாவளி சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து உருவாக்கிய ஆட்சி இது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com