மு.க.ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டை கவர்னரிடம் கொடுத்துள்ளார் - எடப்பாடி பழனிசாமி

பொங்கல் பரிசு மக்களிடம் வரவேற்பை பெற்றதால் மு.க.ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டை கவர்னரிடம் கொடுத்துள்ளார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மு.க.ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டை கவர்னரிடம் கொடுத்துள்ளார் - எடப்பாடி பழனிசாமி
Published on

தூத்துக்குடி,

கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- அரசின் மீது மு.க.ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறரே?.

பதில்:- நான் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றதில் இருந்து இன்றுவரை அவர் இதை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார். இன்றைக்கு புதிதாகச் சொல்லவில்லை. இவ்வாறு சொல்லிக் கொண்டிருப்பவர் இன்று கவர்னரை சந்தித்திருக்கிறார். கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்திருக்கின்றார்கள். அதேபோல், டெல்டா மற்றும் பிற மாவட்டங்களில், நிவர் மற்றும் புரெவி புயலால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

எனவே, இந்த இரண்டையும் கருத்தில்கொண்டு ரங்கராஜன் கமிட்டி பரிந்துரைபடி வருகிற தைத்பொங்கலன்று அனைத்து குடும்பங்களிலும் தைப்பொங்கலை சிறப்பாகக் கொண்டாட வேண்டும்என்கிற காரணத்தால்தான் அனைத்து அரிசிபெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2,500 வழங்கப்படும் என்ற அறிவிப்பை நான் வெளியிட்டேன். பொங்கல் தொகுப்பு அறிவிப்பையும் வெளியிட்டேன்.

அது மக்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. அதை பொறுத்துக்கொள்ளமுடியாமல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுமென்றே, திட்டமிட்டு, அவதூறான, பொய்யான குற்றச்சாட்டை அ.தி.மு.க. அரசு மற்றும் அமைச்சர்கள் மீது சுமத்தி, அதை ஒரு அறிக்கையின் வாயிலாக கவர்னரிடம் கொடுத்துள்ளார். இவையெல்லாம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதுதான்.

கேள்வி:- அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருக்கிறதா? இல்லை என பா.ஜ.க.....

பதில்:- அவரே மறுத்துப் பேசிவிட்டாரல்லவா? வரவேற்றுள்ளாரே? அதுதான் கூட்டணி.

கேள்வி:- 200 சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வெற்றி பெறும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாரே?

பதில்:- அவர் என்ன 300 கூட வைத்துக் கொள்ளலாம், ஓட்டு போடுவது மக்கள்தானே, அதை மறந்து விட்டாரே.

கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணி தொடருமா...

பதில்:- அடிக்கடி எல்லா பத்திரிகைகளிலும், ஊடகத்திலும் சொல்கிறோம், எங்களுடைய கூட்டணி தொடர்கிறது.

கேள்வி:- வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் மீண்டும் கொரோனா தொற்று பரவுவது குறித்து...

பதில்:- தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, வெளிநாட்டில் இருந்து வருகின்றவர்களை எல்லாம் முழுமையாக பரிசோதனை செய்துதான் அனுமதிக்கிறோம். இன்றுகூட பரிசோதனையில் தொற்றுள்ளவரை கண்டுபிடித்திருக்கிறோம். உடனடியாக தனிமைப்படுத்த செய்திருக்கிறோம். ஆகவே, பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பது மிகமிக முக்கியம். நமது பகுதியில் யாருமே முககவசம் அணிவதில்லை. முககவசம் அணிவது மிக மிக முக்கியம் என்று நாங்களும் பலமுறை சொல்லிக் கொண்டேயிருக்கிறோம். கொரோனா வைரஸ் நோய் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதாக பரவக்கூடியது. இதை கட்டுப்படுத்த வேண்டுமென்றால், ஒட்டுமொத்த மக்களும் இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும். அரசு அறிவித்த வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com