

சென்னை,
சென்னையில் கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து, கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோல்வி குறித்து வேதனையுடன் பேசினார்.
வைரமுத்து பேசியதாவது: “இந்த நேரத்தில் என்னுடைய ஆதங்கம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். திமுக தேர்தலில் தோற்கலாம். ஆனால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தோற்றிருக்கக்கூடாது. நிலா தேயலாம், வானம் தேய்ந்து விடக்கூடாது. இதுதான் என்னுடைய ஆதங்கம். கொளத்தூர் தொகுதியை தமிழ்நாட்டின் ஒரு தொகுதியா அல்லது சிங்கப்பூரின் ஒரு பகுதியா என மாற்றி வைத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோற்றிருக்கக்கூடாது மே 4-ம் தேதி ஒருநாள் மட்டும்தான் மு.க.ஸ்டாலின் தோற்றிருக்கிறார்; அந்தத் தொகுதி மக்கள் 365 நாளும் தோற்கடிக்கப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.
ஸ்டாலினுக்காக நான் வருந்துவதைவிட அந்தத் தொகுதி மக்களுக்காக நான் வருந்துகிறேன். ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். திமுக தோல்விக்கு காரணமானவர்கள் என நீங்கள் சுட்டிக்காட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்க இது சரியான நேரம் கிடையாது. ஏனென்றால் எல்லோர் மீது தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுக்க முடியும் சொல்லுங்கள். இது நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டிய காலமாகும்.”இவ்வாறு அவர் பேசினார்.