நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.4,813 கோடி செலவில்13 சாலைகள், ஒரு பாலம்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை,
நெடுஞ்சாலைத் துறை சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி திருவாரூர், நாகப்பட்டினம், சேலம், நாமக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 4,712 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் மற்றும் திருச்சிராப்பள்ளி - கரூர் மாவட்டங்களில் 101 கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஒரு பாலத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 113 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மயிலாடுதுறை புறவழிச் சாலைப்பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
திறந்து வைத்த 13 சாலைகள்:-
செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 897 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் 26 கி.மீ, நீளத்திற்கு (வாலாஜாபாத் புறவழிச்சாலை 6.846 கி.மீ உட்பட) நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்ட மற்றும் 13.79 கி.மீ நீளத்திற்கு 10 மீ அகல இரு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட செங்கல்பட்டு-காஞ்சிபுரம் சாலை (SH58);
திருவள்ளூர் மாவட்டத்தில் 719 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் புன்னப்பாக்கம் முதல் திருவள்ளூர் புறவழிச்சாலை வரை (பிரிவு-2) 12.8 கி.மீ நீளத்திற்கு இருபுறமும் இருவழிச் சேவை சாலைகளுடன் கடினப் புருவத்துடன் அமைக்கப்பட்ட ஆறு வழித்தட சென்னை எல்லை சாலை;
காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் 674 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் 41.779 கி.மீ, நீளத்திற்கு (அரக்கோணம் புறவழிச்சாலை 16.915 கி.மீ உட்பட) 10 மீ அகல இரு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட காஞ்சிபுரம் – அரக்கோணம் – திருத்தணி சாலை;
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில், 559 கோடியே 06 லட்சம் ரூபாய் செலவில் 50.59O கி.மீ நீளத்திற்கு ( ஸ்ரீவைகுண்டம் புறவழிச்சாலை 12.95 கி.மீ உட்பட) 10 மீட்டர் அகல இரு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட திருச்செந்தூர் – பாளையங்கோட்டை – அம்பாசமுத்திரம் சாலை;
தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் 468 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் 36.779 கி.மீ நீளத்திற்கு (வைத்தீஸ்வரன் கோயில் புறவழிச்சாலை 4.150 கி.மீ உட்பட) 10 மீட்டர் அகல இருவழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட கும்பகோணம் – சீர்காழி சாலை;
கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 428 கோடியே 59 லட்சம் ரூபாய் செலவில் 31.51 கி.மீ நீளத்திற்கு 10 மீட்டர் அகல இரு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட கடலூர் – மடப்பட்டு சாலை;
தென்காசி மாவட்டத்தில் 254 கோடியே 13 லட்சம் ரூபாய் செலவில் 22.9 கி.மீ நீளத்திற்கு நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி, மேம்படுத்தப்பட்ட திருநெல்வேலி - செங்கோட்டை - கொல்லம் சாலை;
திருநெல்வேலி மாவட்டத்தில் 239 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் 21.40 கி.மீ நீளத்திற்கு 10 மீட்டர் அகல இரு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட திருச்செந்தூர் – பாளையங்கோட்டை – அம்பாசமுத்திரம் சாலை மற்றும் 51 கோடி ரூபாய் செலவில் 6 கி.மீ நீளத்திற்கு நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்தப்பட்ட திருநெல்வேலி புறவழிச்சாலை;
திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 157 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவில் 14.041 கி.மீ நீளத்திற்கு, (சன்னாநல்லூர் புறவழிச்சாலை 2.00 கி.மீ உட்பட) 10 மீட்டர் அகல இரு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட மயிலாடுதுறை – திருவாரூர் சாலை;
சேலம் மாவட்டத்தில் 95 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் 10 மீட்டர் அகல இரு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட 10.075 கி.மீ நீளத்திற்கு அகலப்படுத்தி உறுதிபடுத்தப்பட்ட மல்லியக்கரை - ஆத்தூர் சாலை;
நாமக்கல் மாவட்டத்தில் 85 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் ஓமலூர்-பரமத்தி சாலை (மாநில நெடுஞ்சாலை –86) அத்திபாளையம் அருகில் தொடங்கி மல்லியக்கரை-ஈரோடு சாலையில் (மாநில நெடுஞ்சாலை –79) தொக்கவாடி அருகில் இணையும் வகையில் 6.6 கி.மீ நீளத்திற்கு 10 மீட்டர் அகல இரு வழிச்சாலையாக திருச்செங்கோடு நகரத்திற்கு புதியதாக அமைக்கப்பட்டுள்ள புறவழிச் சாலை (கட்டம்-2);
திருப்பூர் மாவட்டத்தில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 81 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலையாக 12.60 கி.மீ நீளத்திற்கு அகலப்படுத்தி உறுதிபடுத்தப்பட்ட அவிநாசி – மேட்டுப்பாளையம் சாலை;
திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் 101 கோடியே 37 இலட்சம் ரூபாய் செலவில் உன்னியூர் மற்றும் நெரூர் கிராமங்களை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 113 கோடி ரூபாய் செலவில் முதற்கட்டமாக கல்லணை சாலை மற்றும் தரங்கம்பாடி - மயிலாடுதுறை சாலைகளை இணைக்கும் வகையில் 10 கி.மீ நீளத்திற்கு இருவழித்தடமாக அமைக்கப்படவுள்ள மயிலாடுதுறை புறவழிச் சாலை பணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.

