

சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (26.02.2026) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 175 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 16 திருக்கோவில்களில் 22 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 215 கோடியே 79 லட்சம் ரூபாய் செலவில் 21 திருக்கோவில்களில் 53 முடிவுற்ற திருப்பணிகள், இணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் 10 ஆய்வர் அலுவலகக் கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறையானது தனது கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்குகள் நடத்துதல், பழமையான திருக்கோவில்களை அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து பாதுகாத்தல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது. மேலும், சட்டமன்ற மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.
16 திருக்கோவில்களில் 22 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் :
திண்டுக்கல் மாவட்டம், பழனி, தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் 53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கந்தன் இல்லம், கடம்பன் இல்லம் மற்றும் இடும்பன் குடில் ஆகிய புதிய தங்கும் விடுதிகள் கட்டுதல் மற்றும் திருக்கோவில் வடக்கு கிரிவீதியில் வரிசை மண்டபம் கட்டும் பணிகள்; தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோவிலின் கடற்கரை பரப்பில் ஏற்படும் கடல் அரிப்பை தடுக்கும் பொருட்டு மூழ்கிய கடல்சார் அலை தடுப்பு சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைக்கும் பணி; திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 29.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தற்போதுள்ள மலைப்பாதையை ஒட்டி புதிய மலைப்பாதை அமைக்கும் பணி;
திருச்சி மாவட்டம். சமயபுரம், மாரியம்மன் திருக்கோவிலில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக 15.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கொள்ளிடம் ஆற்றிலிருந்து நாள்தோறும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரும் பணி; தென்காசி மாவட்டம், குற்றாலம், திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோவிலில் 9.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி; ஈரோடு மாவட்டம், தலையநல்லூர், பொன்காளியம்மன் திருக்கோவிலில் 7.05 கோடி மதிப்பீட்டில் ஐந்து நிலை ராஜகோபுரம் மற்றும் புதிய நிறுத்த மண்டபம் கட்டும பணிகள்; கோவை மாவட்டம், தேக்கம்பட்டி, வனபத்ரகாளியம்மன் திருக்கோவிலில் 5.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மகாமண்டபம், வசந்த மண்டபம் மற்றும் ஆற்றங்கரை விநாயகர் சன்னதி கட்டும் பணி;
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோவிலில் 3.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோவில் தெற்கு பகுதியில் உள்ள மொட்டை கோபுரத்தினை ஐந்து நிலை ராஜகோபுரமாக உயர்த்தி கட்டும் பணி; திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோவிலில் 2.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரம் கால் மண்டபத்திற்கு ஒளிரூட்டும்
பணி; தேனி மாவட்டம், தெப்பம்பட்டி அகோபிலராயப் பெருமாள் திருக்கோவிலில் 2.79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோவில் புனரமைக்கும் பணிகள்;
மதுரை மாவட்டம், செல்லூர், திருவாப்புடையார் திருக்கோவிலில் 1.72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரிஷப தீர்த்த குளத்தில் தடுப்பு சுவர் கட்டும் பணி; சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம், முத்துமாரியம்மன் திருக்கோவிலில் 1.06 கோடி மதிப்பீட்டில் அன்னதான கூடம் கட்டும் பணி; ஈரோடு மாவட்டம், திண்டல், வேலாயுதசுவாமி திருக்கோவிலில் 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருச்சுற்றின் உட்பகுதியில் மங்களூர் ஓடு கொண்டு நிழற்கூரை அமைக்கும் பணி;
ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோவில்களை புனரமைக்கும் திட்டத்தின்கீழ், 11.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன காஞ்சிபுரம், தேவராஜசுவாமி திருக்கோவில், திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லூர், மூன்றீஸ்வரமுடையார் திருக்கோவில் மற்றும் வீரவநல்லூர், பூமிநாதசுவாமி திருக்கோவில் ஆகிய 3 திருக்கோவில்களை புனரமைக்கும் திருப்பணிகள்;
என மொத்தம் 175.23 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 22 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.
21 திருக்கோவில்களில் 53 முடிவுற்ற திருப்பணிகள், இணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் 10 ஆய்வர் அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தல் :
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 68.47 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் குடில்கள் மற்றும் வளாகங்கள், கடல் அரிப்பு தடுப்புச் சுவர், சஷ்டி மண்டபங்கள், பூஜைப் பொருட்கள் விற்பனை அங்காடி, விபூதி மற்றும் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் கூடங்கள், சுகாதார வளாகங்கள், திருக்கோவில் நுழைவாயில் மற்றும் பசு மடம்; திருள்ளூர் மாவட்டம், திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவிலில் 39.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நிர்வாக அலுவலக வளாகம், பக்தர்கள் தங்கும் அறைகள், பூஜைப் பொருட்கள் விற்பனை அங்காடி, முடிகாணிக்கை மண்டபம், சுகாதார வளாகம், விரிவாக்கப்பட்ட அன்னதானக் கூடம், பொங்கல் மண்டபம்; மதுரை மாவட்டம், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் 35 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி;
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், பவானி அம்மன் திருக்கோவிலில் 22.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வரிசை மண்டபம்; விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி, மாரியம்மன் திருக்கோவிலில் 17.68 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள திருக்கோவிலுக்கு வரும் வழியில் அர்ச்சுனா ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம், நான்கு சுகாதார வளாகங்கள் மற்றும் குளியலறைகள், திருக்கோவில் உட்பிரகார மற்றும் வெளிபிரகார மண்டபங்களின் கான்கிரீட் தூண்களில் அலங்கார சுதை வேலைபாடுகள், மூன்று நுழைவு தோரணவாயில்கள் மற்றும் கலையரங்கம்; சேலம் மாவட்டம், மேச்சேரி, அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் 4.95 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி, விருந்து மண்டபம் மற்றும் செயல் அலுவலர் குடியிருப்பு;
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் 4.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சஷ்டி மண்டபம்; 2.92 கோடி ரூபாய் செலவில் கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம், பொதுபஜனை மடத்தில் புனரமைக்கப்பட்ட பஜனை மடம் மற்றும் சென்னை, எழும்பூர். சீனிவாசப் பெருமாள் திருக்கோவில், கோவை மாவட்டம், சூலக்கல், மாரியம்மன் விநாயகர் திருக்கோவில், கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆதிதிருவரங்கம், அரங்கநாதசுவாமி திருக்கோவில், கடலூர் மாவட்டம், பெருமுளை, அருள்மிகு முத்தையாசாமி திருக்கோவில் மற்றும் வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோவில் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடங்கள்;
3.32 கோடி ரூபாய் செலவில் திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோவிலின் உபகோவில்களான ஆதிஅருணாசலேசுவரர் திருக்கோவிலில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம், திருக்குள சுற்றுச்சுவர் மற்றும் குபேரலிங்கம் திருக்கோவிலில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம் மற்றும் திருக்குள சுற்றுச்சுவர்; 3 கோடி ரூபாய் செலவில் கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூரில் கட்டப்பட்டுள்ள மண்டல இணை ஆணையர் அலுவலக கட்டடம்; கடலூர் மாவட்டம், சிதம்பரம், தில்லையம்மன் திருக்கோவிலில் 2.75 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட திருக்குளம்;
தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை, காலபைரவர்சுவாமி திருக்கோவிலில் 1.79 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி; தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோவிலில் 1.79 கோடி ரூபாய் செலவில் திருக்கோவில் கோபுரங்கள் மற்றும் விமானங்கள் இரவு நேரங்களில் பல வண்ணங்களில் ஒளிரும் வகையில் ஒளிரூட்டுதல்; திருவள்ளூர் மாவட்டம், ஆண்டார்குப்பம், பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 1.73 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட திருக்குளம்; கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலையில் 1.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உதவி ஆணையர் அலுவலகம்;
கடலூர் மாவட்டம், திட்டக்குடி, வைத்தியநாதசுவாமி திருக்கோவிலில் 1.28 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட திருக்குளம்; 1.20 கோடி ரூபாய் செலவில் சிவகங்கை மாவட்டம், நாச்சியார்புரம், திருப்பத்தூர், தேவகோட்டை, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, திருவாடானை, திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான், திருநெல்வேலி மேற்கு, ராதாபுரம், திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் மற்றும் பொன்னேரி ஆகிய 10 இடங்களில் கட்டப்பட்டுள்ள சரக ஆய்வாளர் அலுவலகங்கள்; நாகப்பட்டினம் மாவட்டம், தெற்குபொய்கைநல்லூர், சொர்ணபுரீஸ்வரசுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 1.11 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட காய்கறி சந்தை; ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பக்தர்கள் ஓய்வுக்கூடம் கைப்பேசி மற்றும் பொருட்கள் வைப்பறை மற்றும் பக்தர்களுக்கான சிற்றுந்து சேவை;
என மொத்தம் 215.79 கோடி ரூபாய் செலவிலான 65 முடிவுற்ற பணிகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் முனைவர் துரை. ரவிச்சந்திரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.