சிவகங்கையில் ரூ.1.06 கோடி செலவில் மருது சகோதரர்கள் உருவச்சிலை: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் சிவகங்கையில் 1 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் மருது சகோதரர்கள் சிலை நிறுவப்பட்டுள்ளது.
சிவகங்கையில் ரூ.1.06 கோடி செலவில் மருது சகோதரர்கள் உருவச்சிலை: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
Published on

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் சிவகங்கையில் 1 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்கள் உருவச் சிலையை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், உருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

மருது சகோதரர்களுக்கு நிறுவப்பட்டுள்ள திருவுருவச் சிலையை திறந்து வைத்தல்:

விருதுநகர் மாவட்டம், அழகாபுரி முக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் சேர்வை பொன்னாத்தாள் தம்பதியினரின் மகன்களாக 1748-ம் ஆண்டு பெரியமருதும், 1753-ம் ஆண்டு சின்னமருதும் பிறந்தார்கள். மருது பாண்டியர்கள் படைத்தளப் பயிற்சியில் தேர்ச்சி பெற்றனர். மன்னர் விஜயரகுநாதரின் மகளான ராணி வேலுநாச்சியாரின் நண்பர்களாக மருது பாண்டியர்கள் இருந்தனர். சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணமுடித்து சிவகங்கை வந்தபோது அவர்களுடன் இருந்தனர். ஆற்காடு நவாப்பிற்கு சிவகங்கை அரசினர் கப்பம் செலுத்தாத காரணத்தினால் இவர்கள் மீது ஆங்கிலேயர்கள் போர் தொடுத்தனர். இப்போரில் மன்னர் முத்துவடுகநாதர் வீரமரணம் அடைந்தார்.

எட்டு ஆண்டுகளுக்குப் பின்பு வீரமங்கை ராணி வேலுநாச்சியார், மருதுபாண்டியர்கள் மற்றும் ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோர்கள் உதவியுடன் ஆட்சியை கைப்பற்றினார்கள். ஆங்கிலேயர்கள் மருதுபாண்டியரை “சேர்வைக்காரர்கள் என்று சிறப்புப் பட்டம் வழங்கி அழைத்து வந்தனர். ஆங்கிலேயர்களால் 19.10.1801 அன்று சோழபுரம் காட்டில் மருது பாண்டியர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட பின்னர், 24.10.1801 அன்று மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

மருது சகோதரர்களை சிறப்பிக்கும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 2024-25-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், தாய்நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து நடைபெற்ற விடுதலை வேள்வியில் தீர்க்கமாய்ப் போரிட்ட சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்களுக்கு சிவகங்கை மாவட்டத்தில் உருவச் சிலை நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பிற்கிணங்க, சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் 1 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள மருது சகோதரர்கள் உருவச் சிலையை தமிழ்நாடு முதல்-அமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக இன்றையதினம் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, அ.வெங்கடேசன், எம்.பூமிநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் இரா.வைத்திநாதன், மதுரை மாவட்ட கலெக்டர் கே.ஜே.பிரவீன்குமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சிவகங்கை மாவட்டத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி, மாங்குடி, சிவகங்கை மாவட்ட கலெக்டர் கா.பொற்கொடி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com