இன எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் - திமுக குறும்படம் வெளியீடு

பெரியார் ஏற்றிய சமூக நீதி எனும் பெரும் நெருப்பு இன்னும் சுடர்விட்டு எரிந்துக்கொண்டு தான் இருக்கிறது என்று திமுக குறும்படம் வெளியிட்டுள்ளது.
சென்னை,
திமுகவின் ‘எக்ஸ்' பக்கத்தில் ‘சமூக நீதி எனும் பெரு நெருப்பு' என்ற தலைப்பில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் வருமாறு:-
100 ஆண்டுகளுக்கு முன் பெரியார் ஏற்றிய சமூக நீதி எனும் பெரும் நெருப்பு இன்னும் சுடர்விட்டு எரிந்துக்கொண்டு தான் இருக்கிறது. பெரியாரோடு இந்த பெரும் நெருப்பு அணைந்துவிடும் என இன எதிரிகள் நினைத்தார்கள். ஆனால் சமூக நீதி சுடரை பெரியாரிடம் இருந்து பேரறிஞர் அண்ணா பெற்று ஆட்சி அமைத்தார்.
அண்ணாவின் ஆட்சி விரைந்து முடிந்து விட்டது. இனி நெருப்பு அணைந்துவிடும் என அதே இன எதிரிகள் நினைத்தனர். அவர்களின் எண்ணத்தை தனது சமூக நீதி ஆட்சி மூலம் சுக்கு நுாறாக உடைத்தார் கருணாநிதி. எளியவர்களுக்கு நம்பிக்கை ஒளியாகவும், எதிரிகளுக்கு எரிக் கல்லாகவும் எரிந்தது கருணாநிதி கையில் அண்ணா தந்த சமூக நீதி சுடர்.
பெரியாரின் திராவிட கருத்தியலை ஏந்தி, அண்ணா வழியில், கருணாநிதி தந்த சமூக நீதி சுடரை அடுத்தக்கட்டத்திற்கு சமூக நீதி 2.0 என எடுத்துச் சென்று உள்ளார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டின் சமூக நீதி சுடரை முன்னின்று பாதுகாத்து, இன எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். இவ்வாறு வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.






