

ஈரோடு,
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஈரோடு மாவட்டம் அரியப்பம்பாளையத்தில் நடைபெற பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,
சொந்த காலில் நிற்கும் கட்சி அதிமுக. யாருக்கும் அதிமுக பயப்படாது. அதிமுக சுதந்திரமாக செயல்படும் தன்மானமுள்ள கட்சி. அதிமுகவை பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு பேசுகிறார். பாஜகவுக்கு அதிமுக அடிமை என்று அரசு நிகழ்ச்சி, திமுக நிகழ்வில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு இல்லை. போதை கலாசாரம் அதிகரித்துவிட்டது. தமிழக காவல்துறையில் டிஜிபி நியமிக்கவில்லை.
மக்களை திமுக இன்னும் சந்திக்கவில்லை. இந்த திமுக ஆட்சியில் செய்தால் தானே சொல்வதற்கு இருக்கும்.
இதுவரை 181 சட்டமன்ற தொகுதிகளுக்கு நேரடியாக சென்று மக்களை அதிமுக சந்தித்துள்ளது.
திமுக கூட்டணி ஆட்டம் கண்டுள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணி நிலைக்குமா? என்பது சந்தேகம்தான். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் - திமுக இடையே வார்த்தைப்போர் நடக்கிறது.
கனி தானாக பழுக்க வேண்டும். கூட்டணி தானாக அமைய வேண்டும். ஸ்டாலின் கூவிக்கூவி அழைக்கிறார். ஆனால் கூட்டணிக்கு யாரும் வரவில்லை.
கருணாநிதி உடல்நிலை குன்றியபோது கட்சி பதவியை ஸ்டாலினுக்கு கொடுக்கவில்லை. ஸ்டாலின் திறமையில்லாதவர்.
உழைத்து உழைத்து படிப்படியாக முன்னேறியவன் நான். அப்பா வழியில் முதல்-அமைச்சரானவர் மு.க.ஸ்டாலின்.
அதிமுக ஆட்சியில் விவசாயம் செழித்திருந்தது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுத்தோம்.
திட்டமிட்டு எவ்வளவு அவதூறு பரப்பினாலும் எடுபடாது என்பதை ஆணித்தரமாக கூறுகிறேன்.
குலவிளக்கு திட்டத்தில் மகளிருக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். பெண்களை போன்றே இலவச பேருந்து பயண திட்டம் ஆண்களுக்கும் நீட்டிக்கப்படும்.
டெண்டர்கள் மூலம் திமுக ஊழல் செய்கிறது. மணல் கொள்ளைக்கு அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர்.
5 ஆண்டுகள் சாதனையை 1,000 ஆண்டு வரலாறு பேசும் என்று பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். ஆனால், 5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் வாங்கி மக்களை திமுக அரசு கடன்காரர்களாக ஆக்கிவிட்டது. மு.க.ஸ்டாலின் தனது வீட்டு மக்களை மட்டும்தான் சிந்திப்பார். நாட்டு மக்களை பற்றி சிந்திக்க அவருக்கு நேரமில்லை. மு.க.ஸ்டாலின் விளம்பரத்தை நம்பி ஆட்சி செய்கிறார்.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு தலா 3 கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும்
மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும். சிறுபான்மை வகுப்பு மகளிருக்கு சுயதொழில் தொடங்க வட்டியில்லா கடன்வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும்'
என்றார்.