மு.க.ஸ்டாலின் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார் - அன்புமணி

திமுக அரசின் தோல்விகளை திசை திருப்ப மு.க.ஸ்டாலின் பொய்களைக் கூறுவது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நெல்லுக்கு கொள்முதல் விலையுடன் வழங்கப்படும் ஊக்கத்தொகையை நிறுத்தும்படி மத்திய அரசு கட்டாயப்படுத்துவதாக அபாண்டமான குற்றச்சாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய அரசின் கடிதத்தில் நெல்லுக்கான ஊக்கத்தொகையை நிறுத்த்தும்படி எந்த ஆணையும் இல்லாத நிலையில், திமுக அரசின் தோல்விகளை திசை திருப்ப மு.க.ஸ்டாலின் பொய்களைக் கூறுவது கண்டிக்கத்தக்கது.

காவிரி பாசன மாவட்டங்களில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நெல்லுக்கான கொள்முதல் விலையுடன் சேர்த்து வழங்கப்படும் ஊக்கத்தொகையை நிறுத்தும்படி மத்திய அரசு கட்டாயப்படுத்துவதாக குற்றஞ்சாட்டினார். அதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் ஊக்கத்தொகை அறிவிப்பது என்பது எப்போதும் மாநில அரசுகளின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது. அதை யாரும் பறிக்கவில்லை. அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் அனுப்பப்பட்ட தகவல், மாநில அரசுகள் வழங்கும் ஊக்கத்தொகை கொள்கைகளை தேசிய முன்னுரிமைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற ஒரு ஆலோசனையே ஆகும்" என்று தெளிவாக விளக்கமளித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எழுதியிருந்த கடிதத்தை நிர்மலா சீதாராமன், இன்று காலை வெளியிட்டுள்ளார். அதில் பயிர் சாகுபடியை பரவலாக்குவது, சிறுதானியம், எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள் ஆகியவற்றின் சாகுபடியை அதிகரிப்பது ஆகியவை குறித்து அறிவுறுத்தியுள்ள மத்திய அரசு, நெல்லுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை அந்தப் பயிர்களுக்கு வழங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய ஆலோசனைகள் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்தே மாநில அரசுகளுக்கு வழங்கப்படுவதுதான். அதை ஏற்க வேண்டிய கட்டாயம் மாநிலங்களுக்கு இல்லை.

அவ்வாறு இருக்கும்போது, மு.க.ஸ்டாலின் இதை பெரும் பிரச்சினையாக்க முயல்வது ஏன் என்பது தெரியவில்லை. இதில் குறிப்பிடப்பட வேண்டிய உண்மை என்னவென்றால், மத்திய அரசின் கடிதம் எழுதப்பட்ட நாள் ஜனவரி 9-ம் தேதி ஆகும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உண்மையாகவே அக்கறை இருந்திருந்தால், அப்போதே இந்தக் கடிதத்தை வெளியிட்டு மத்திய அரசின் ஆலோசனையை ஏற்க முடியாது; மாறாக நெல்லுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை குவிண்டாலுக்கு ரூ.131-லிருந்து ரூ.1,131 ஆக உயர்த்தி, ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 வழங்கப்படும் என்று அறிவித்திருந்திருக்கலாம். அதனால் உழவர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்; அதை மத்திய அரசாலும் தடுக்க முடியாது; அதை மத்திய அரசும் தடுக்காது; மு.க.ஸ்டாலினும் மாநில அரசின் உரிமைகளை பாதுகாத்து விட்டதாக முழக்கமிட்டிருக்கலாம். ஆனால், அப்போது அதை மு.க.ஸ்டாலின் செய்யவில்லை. மாறாக, வாய்மூடி மவுனியாகத்தான் இருந்தார்.

மத்திய அரசின் கடிதம் தமிழ்நாட்டுக்கு மட்டும் அனுப்பப்படவில்லை. அனைத்து மாநிலங்களுக்கும் தான் அனுப்பப்பட்டது. அந்தக் கடிதத்தில் அடிப்படையில் கேரளத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினரான ஜான் பிரிட்டாஸ் இதுகுறித்து மாநிலங்களவையில் வினா எழுப்பினார். அப்போது அவையில் இருந்த திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வாயை மூடிக் கொண்டுதான் இருந்தனர். மக்களவையில் இருந்த தமிழ்நாடு மற்றும் புதுவையைச் சேர்ந்த 40 உறுப்பினர்களும் இது குறித்து வாயைத் திறக்கவில்லை. ஆனால், கடிதம் எழுதப்பட்டு இன்றுடன் 96 நாள்கள் ஆகும் நிலையில் இப்போதுதான் மு.க.ஸ்டாலின் அதுகுறித்து பேசுகிறார்; அதுவும் தப்புத் தப்பாக பேசுகிறார் என்றால், அவரின் நோக்கம் உழவர்களின் நலன்களை பாதுகாப்பது அல்ல... மாறாக, தேர்தல் களத்தில் திமுகவுக்கு எதிராக வீசும் பெரும் அலையை எந்தப் பொய்யை சொல்லியாவது தடுத்து விடலாமா? என்ற நப்பாசை தான்.

உழவர்களின் நலனுக்காக இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கும் மு.க.ஸ்டாலின் கடந்த ஐந்தாண்டுகளில் உழவர்களின் நலனுக்காக செய்தது என்ன?

* 2021-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் உழவர்களின் நலனுக்காக 56 வாக்குறுதிகளை அளித்த மு.க.ஸ்டாலின், அவற்றில் 8 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றினார்; 48 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

* நீர்வளத்துறை சார்ந்து 29 வாக்குறுதிகளைக் கொடுத்த ஸ்டாலின், அவற்றில் வெறும் 2 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றினார். மீதமுள்ள 27 வாக்குறுதிகள் இப்போது வரை நிறைவேற்றவில்லை.

* திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 கொள்முதல் விலை வழங்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின், 2021-ம் ஆண்டில் வழங்கியிருக்க வேண்டிய ரூ.2,500 விலையை நான்கரை ஆண்டுகள் கழித்து இப்போதுதான் வழங்கியிருக்கிறார். உண்மையில் 2021-ம் ஆண்டில் நடைமுறையில் இருந்த கொள்முதல் விலையை விட திமுக வாக்குறுதி அளித்த கொள்முதல் விலை 32.42 சதவீதம் அதிகம் ஆகும். அதே அளவீட்டைக் கொண்டு பார்த்தால் இப்போது ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,311 வழங்க வேண்டும். ஆனால், அதைவிட ரூ.811 குறைவாக கொடுத்து விட்டு நெல்லுக்கு அதிக விலை கொடுத்து விட்டதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்.

* தமிழக அரசால் தற்போது குவிண்டால் ரூ.2,500-க்கு கொள்முதல் செய்யப்படும் சாதாரண ரக நெல்லுக்கு மத்திய அரசு ரூ.2,369 விலை வழங்குகிறது. அத்துடன் தமிழக அரசு ரூ.131 மட்டும் ஊக்கத்தொகையாக வழங்குகிறது. அதிலும் கூட முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.50 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அத்துடன் கடந்த ஐந்தாண்டுகளில் ரூ.81 மட்டுமே திமுக அரசு உயர்த்தி வழங்கியிருக்கிறது. இது என்ன சாதனையா? ஒடிசா அரசு ஒரு குவிண்டாலுக்கு ரூ.800, ஆந்திரம் மற்றும் தெலுங்கானா ரூ.500 வீதம் ஊக்கத்தொகை வழங்குகின்றன. ஆனால், அதில் ஆறில் ஒரு பங்கைத் தான் திமுக அரசு வழங்குகிறது.

மாறாக உழவர்களை சுரண்டுவதில்தான் திமுக அரசு தீவிரம் காட்டி வருகிறது. நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் 40 கிலோ மூட்டைக்கு ரூ.60 வீதம் கையூட்டு வாங்கப்படுவதுடன், மூட்டைக்கு 2 கிலோ நெல்லை குறைத்து கணக்கு காட்டப்படுகிறது. அதனால், ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.150 வீதம் கையூட்டும், ரூ.125 மதிப்புள்ள 5 கிலோ நெல்லும் சேர்த்து ரூ.275 வீதம் கையூட்டு வழங்க வேண்டியுள்ளது. ரூ.131 ஐ கொடுத்து விட்டு, ரூ.275-ஐ பறித்துக் கொள்ளும் திமுக அரசுக்கு உழவர்கள் நலன் என்ற சொல்லை உச்சரிக்கவே தகுதி இல்லை.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 10 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இன்று வரை திமுகவின் பரப்புரை மக்களிடம் எடுபடவில்லை. அதனால், எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற சூழலில் இருக்கும் மு.க.ஸ்டாலின் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார். ஆனால், 5 ஆண்டுகளாக திமுக அரசால் சுரண்டப்பட்ட உழவர்களும், மக்களும் மன்னிக்கத் தயாராக இல்லை. அவர்கள் இந்தத் தேர்தலில் திமுகவுக்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் என்பது உறுதி. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com