

சென்னை,
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் அவ்வப்போது ஏற்படும் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகிறது. இவ்வரசு பொறுப்பேற்ற இந்த ஐந்து ஆண்டு காலத்தில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 4,977 உதவி மருத்துவர்கள், 27 மாற்றுத்திறனாளி செவிலியர்கள், 1,011 மருந்தாளுநர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ உதவியாளர்கள், உள்ளிட்ட இதர மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் என மொத்தம் 12,177 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 36 மருத்துவக் கல்லூரிகள், 37 மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் 262 அரசு தாலுக்கா மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சிறப்பு மருத்துவர்களை நியமிக்கும் பொருட்டு தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு, மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ துறையில் 182 சிறப்பு மருத்துவர் பணியிடங்களுக்கும், கதிரியக்கவியல் துறையில் 37 சிறப்பு மருத்துவர் பணியிடங்களுக்கும், தடயவியல் மருத்துவத் துறையில்24 சிறப்பு மருத்துவர் பணியிடங்களுக்கும், முதியோர் மருத்துவ துறையில் 6 சிறப்பு மருத்துவர் பணியிடங்களுக்கும், இருதய அறுவை சிகிச்சை துறையில் ஒரு சிறப்பு மருத்துவர் பணியிடத்திற்கும், என மொத்தம் 250 சிறப்பு மருத்துவர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத் தலைவர் உமா மகேஸ்வரி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்குநர் மருத்துவர் அ.சோமசுந்தரம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.