மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கும் பணி மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

மதுரையில் அமைக்கப்படவுள்ள கலைஞர் நினைவு நூலகத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கும் பணி மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
Published on

சென்னை,

ஒரு நூற்றாண்டு கால இந்திய வரலாற்றில் எங்கு நோக்கினும் இடைவெளி இன்றி முத்திரை பதித்திருக்கும் உன்னதத் தலைவர் கருணாநிதி என்றால் அது மிகையாகாது. 80 ஆண்டு கால பொது வாழ்க்கையில் அயராது பணியாற்றியவர் - சட்டமன்றத்தில் 50 ஆண்டுகள் சண்டமாருதமாக முழங்கியவர் - 13 முறை அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றவர். 5 முறை முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்று அரிய பல சாதனைகளை நிகழ்த்தி அழியாப் புகழ் பெற்றவர்.

எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர், பத்திரிகையாளர், படைப்பாளி, அரசியல், ஆட்சி என எத்துறையைத் தொட்டாலும், அத்துறையில் முத்திரை பதித்த மாபெரும் தலைவர் கருணாநிதியின் பெருமையைப் போற்றும் விதமாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு 3-6-2021 அன்று வெளியிட்ட அறிவிப்பில், புத்தகங்கள் மீதும், புத்தகங்களை வாசிப்பதின் மீதும் வாழ்நாள் முழுவதும் தீராப் பற்றினை கொண்ட கருணாநிதி, 2010-ம் ஆண்டில் அண்ணாவின் 102-வது பிறந்தநாள் அன்று சென்னை, கோட்டூர்புரத்தில், ஆசியாவின் அதிநவீன மிகப்பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார்.

மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் அறிவொளி அளிக்கும் கலங்கரை விளக்கமாக இந்த நூலகம் விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் வாழும் மக்களும், இத்தகைய அரிய வாய்ப்பினைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, சங்கத்தமிழ் வளர்த்த மதுரையில், கருணாநிதி நினைவு நூலகம் 2 லட்சம் சதுரஅடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ள பொதுப் பணித் துறை வளாகத்தில் 2.70 ஏக்கர் நிலத்தில், ரூ.99 கோடி மதிப்பீட்டில், 2 லட்சத்து 13 ஆயிரத்து 288 சதுர அடி கட்டிடப் பரப்பளவில் கட்டப்படவுள்ள அடித்தளத்துடன் கூடிய 8 தளங்கள் கொண்ட கலைஞர் நினைவு நூலகத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

நூல்கள் வாங்க ரூ.10 கோடி

நூலகத்திற்குத் தேவையான நூல்கள், மின்நூல்கள் இணையவழி பருவ இதழ்கள் மற்றும் ஆராய்ச்சி நூல்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கு ரூ.10 கோடியும், தொழில் நுட்ப சாதனங்கள் கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு அரசால் ரூ.5 கோடியும் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நூலகம், மாணவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், இலக்கியவாதிகள், போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்திக் கொள்ளும் இளைஞர்கள், பள்ளிச்சிறார்கள் என சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் அறிவொளி அளிக்கும் கலங்கரை விளக்கமாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

பங்கேற்றவர்கள்

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் ஐ.லியோனி, தலைமைச் செயலாளர் இறையன்பு, பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com