

சென்னை,
பேரன் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க முன்னாள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் லண்டன் புறப்பட்டார்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றி தனி பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சி அமைத்துள்ளது. முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சி அமைத்து 40 நாட்களை கடந்து உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை, பயிர் கடன் தள்ளுபடிக்கு எதிராக விவசாயிகள் போராட்டம், பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு என எதிர் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அனிதா ராதாகிருஷ்ண கைது, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சிங்கபூர் மருத்துவமனையில் அனுமதி என தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு சென்று கொண்டிருக்கிறது.
மறுபுறம், அதிமுகவில் உட்கட்சி மோதல் காரணமாக கட்சி முன்னால் அமைச்சர்கள், எம் எல் ஏக்கள், நிர்வாகிகள் என பலரும் தமிழக வெற்றி கழகத்தில் ஐக்கியமாகி வருகின்றனர். இதனால் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விஜய் தலைமையிலான தாவிக்கு அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக உள்ளிட்ட குற்றசாட்டுகளை முன்வைத்து தமிழக அரசியல் களம் அடுத்தடுத்த நகர்வுகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் தற்பொழுது லண்டன் புறப்பட்டு சென்றுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனும், மு.க.ஸ்டாலினின் பேரனுமான இன்பநிதி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான உயர்கல்வி பயின்று வருகிறார். அவரது பட்டமளிப்பு விழா இந்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்காகவே மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் லண்டன் புறப்பட்டு சென்றுள்ளார்.
பட்டமளிப்பு விழாவுக்குப் பிறகு, சுமார் 10 நாட்கள் லண்டனில் ஓய்வெடுக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜூலை 20-க்குப் பிறகு சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.
லண்டன் புறப்படுவதற்காக இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு, 500க்கும் மேற்பட்ட திமுகவினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் செல்லும் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து லண்டன் செல்கிறார்.