கவர்னருடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு: அ.தி.மு.க. அரசு, அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் அளிக்கிறார்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். அப்போது, அ.தி.மு.க. அரசு மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை அளிக்கிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. பிரதான கட்சிகள் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டன. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் சூறாவளி பிரசாரத்தை தொடங்குகிறார்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் தொடர்பாக நேற்று முன்தினம் தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, அ.தி. மு.க.வை நிராகரிப்போம் என்ற பிரசார இயக்கத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தொடங்கிய முதல் 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதில் பதிவிட்டுள்ளனர்.

நாளை (புதன்கிழமை) முதல் 10 நாட்கள் தி.மு.க.வை சேர்ந்த 1,600 நிர்வாகிகள், 16 ஆயிரம் கிராமங்களில், கிராம சபை கூட்டத்தை நடத்த உள்ளனர். அதில், அ.தி.மு.க. அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டு, தமிழக அரசின் தோல்விகள் குறித்தும் விளக்கமாக தெரிவிக்க இருக்கின்றனர். மேலும், அ.தி. மு.க.வுக்கு எதிரான மக்களின் தீர்மானத்தில் கையெழுத்து வாங்க இருக்கின்றன.

இதுபோன்ற பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று, கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்க இருக்கிறார். அப்போது, அ.தி.மு.க. அரசின் தவறுகளையும், ஊழல் பட்டியலையும், அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலையும் கவர்னரிடம் அவர் வழங்க இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com