

சென்னை,
இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு தடை விதித்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த 28-ந்தேதி இரவு சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் சிலர் மாட்டு இறைச்சி உணவு திருவிழாவுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் ஐ.ஐ.டி. வளாகத்தில் உணவு சாப்பிட சென்ற கேரளாவை சேர்ந்த மாணவர் சூரஜை மாணவர்கள் சிலர் சுற்றி வளைத்து தாக்கினர்.
இந்த தாக்குதலில் சூரஜின் வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. மாட்டு இறைச்சி உணவு திருவிழாவுக்கு அவர் ஏற்பாடு செய்ததாக இந்த தாக்குதல் நடைபெற்று உள்ளது.
படுகாயம் அடைந்த சூரஜ் வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சூரஜை மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.