பழங்குடியினருக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் ஸ்டேன் சாமியின் அஸ்திக்கு மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை

பழங்குடியினருக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த ஸ்டேன் சாமியின் அஸ்திக்கு, சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பழங்குடியினருக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் ஸ்டேன் சாமியின் அஸ்திக்கு மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை
Published on

சென்னை,

ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் 1937-ம் ஆண்டு பிறந்தவர் ஸ்டேன் சாமி என்று அழைக்கப்படும் ஸ்டானிஸ்லாஸ் லூர்துசாமி. இவர் சிறு வயதிலேயே சமூக தொண்டாற்றுவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.

ரோமன் கத்தோலிக்க பாதிரியாரான ஸ்டேன் சாமி, பெங்களூருவில் உள்ள ஜேசுயிட் நடத்தும் இந்திய சமூக நிறுவனத்தின் இயக்குனராக இருந்தார். பழங்குடியின மக்களின் உரிமைக்காகவும், அவர்களின் மேம்பாட்டுக்காகவும் போராடினார்.

பழங்குடியினருக்காக குரல்

இந்திய அரசியலமைப்பின் 5-வது அட்டவணையில் உள்ள அம்சங்களை அமல்படுத்தாமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். பழங்குடியின மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு, மேம்பாட்டுக்காக பழங்குடியினரை உறுப்பினர்களாக கொண்ட பழங்குடியினர் ஆலோசனைக்குழு அமைக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்தார்.

ஜார்கண்டில் ஆதிவாசிகள் நிலங்களை பாதுகாக்கும் போராட்டத்திற்காக ஸ்டேன் சாமி தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 5-ந்தேதி அவர் உயிரிழந்தார். பழங்குடியின மக்களின் உரிமை போராளியும், மனித உரிமை செயற்பாட்டாளருமான மறைந்த ஸ்டேன் சாமி மறைவையொட்டி, முதல்-அமைச்சர் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், அடித்தட்டு மக்களுக்காக போராடிய அவருக்கு நேர்ந்த துயரம் இனி எவருக்கும் நிகழக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.

மு.க.ஸ்டாலின் மரியாதை

இந்தநிலையில் சென்னை லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த ஸ்டேன் சாமியின் அஸ்திக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, கனிமொழி எம்.பி. தயாநிதி மாறன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இனிகோ இருதயராஜ், சிந்தனைச் செல்வன், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com