சாலை விபத்தில் உயிரிழந்த தி.மு.க. உறுப்பினர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
சென்னை,
மதுரையில் கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 'தி.மு.க. உறுப்பினர்கள் சாலை விபத்தில் இறந்து போனால், அவர்கள் குழந்தைகள் படிப்பு மற்றும் குடும்ப சூழலுக்காக ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும்' என்று அறிவித்தார். அதன்படி இறந்த உறுப்பினர்களின் குடும்ப வாரிசுகள் வயது 21-க்கு குறைவாக இருக்கும் குடும்பத்துக்கு இந்த நிதி உதவி அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கேரள மாநிலம் கோனி சென்டிரல் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, விபத்தில் சிக்கி பலியான நெல்லை மேற்கு மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. உறுப்பினர் மேகலிங்கம் என்பவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் உதவி கிடைத்துள்ளது. உயிரிழந்த மேகலிங்கத்தின் மனைவி செல்வி மற்றும் குழந்தைகளை சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வரவழைத்து தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை நேற்று வழங்கினார்.
அப்போது தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






